Last Updated : 18 Dec, 2018 02:32 PM

 

Published : 18 Dec 2018 02:32 PM
Last Updated : 18 Dec 2018 02:32 PM

மூன்று மாநிலங்களின் தோல்வியால் பாஜகவுக்கு மாநிலங்களவையில் பின்னடைவு

மூன்று மாநிலங்களின் தோல்வியால் பாஜகவிற்கு மாநிலங்களவையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு தனிப்பெரும்பான்மைக்காக அக்கட்சி எதிர்பார்த்த மெஜாரிட்டியைப் பெறும் வாய்ப்பை இழப்பதாகக் கருதப்படுகிறது.

மே 14, 2014-ல் தனது தலைமையில் ஆட்சி அமைத்த பாஜகவிற்கு மக்களவையில் தனி மெஜாரிட்டி இருந்தது. இதே மெஜாரிட்டி அக்கட்சியின் கூட்டணிக்கும் மாநிலங்களவையில் இல்லாமையால், பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற முடியாமல் இருந்தது.  இதற்கு காங்கிரஸுடன் மற்ற எதிர்கட்சிகள் இணைந்து தடை போட்டபடி இருந்தனர். எனவே, மாநிலங்களவையில் தனி மெஜாரிட்டியை எதிர்பார்த்து பாஜக தனது நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வந்தது.

இந்நிலையில், நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்குப் பின் தனக்கு மாநிலங்களவையில் கூடுதல் உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என பாஜக நம்பியிருந்தது. இந்த மாநிலங்களில்  இருந்து மாநிலங்களவைக்கு குறைந்தபட்சம் ஒன்பது உறுப்பினர்கள் அடுத்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த சூழலில் 5 மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால்  பாஜக எதிர்பார்த்த தனி மெஜாரிட்டி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் விவாதம் செய்து நிறைவேற்றுவது அவசியம்.

இதில் ராமர் கோயில் போன்ற முக்கிய சட்ட மசோதா, சாதாரணமானது என அதன் வகைகளுக்கு ஏற்றபடி உறுப்பினர்கள் ஆதரவு மாநிலங்களவையில் அவசியம். பல்வேறு அரசியல் காரணங்களால் சில கட்சிகள் இந்தவகை மசோதாக்கள் வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து விடுகின்றனர்.

இவ்வாறு வெளிநடப்பு செய்யாமல் அனைவரும் அவையில் இருந்தால் மொத்தம் 126 உறுப்பினர்களின் ஆதரவை மத்திய அரசு பெற வேண்டி இருக்கும். இதுபோன்ற சமயங்களில் அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளை பாஜக நம்ப வேண்டியிருக்கும்.

இவ்விருகட்சிகளும் பாஜகவின் கூட்டணியில் இல்லை என்றாலும் அதற்குத் தேவைப்படும் சமயங்களில் சரியாக தம் ஆதரவை அளித்து வருகின்றன. 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் அதிகமாக பாஜகவிற்கு 73 உறுப்பினர்கள் உள்ளனர்.  இதன் அடுத்த நிலையில் காங்கிரஸ் 50 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மூன்றாவது நிலை பெற்றுள்ள மூன்று கட்சிகளான அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு தலா 13 உறுப்பினர்கள் உள்ளனர்.

பிஜு ஜனதா தளம் 9, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 உறுப்பினர்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 5 உறுப்பினர்களும் உள்ளனர். மீதி உறுப்பினர்களை இதர கட்சிகள் பெற்றுள்ளனர்.

அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் 8  உறுப்பினர்கள், மற்றும் 2020-ல் 73 உறுப்பினர்களின் பதவிகளும் மாநிலங்களவையில் காலியாகி அதற்கு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் வீசிய பிரதமர் நரேந்திர மோடி அலை தொடரவில்லை எனில், பாஜகவிற்கு மாநிலங்களவையில் மேலும் அதிக இழப்பு ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x