Published : 06 Dec 2018 02:44 PM
Last Updated : 06 Dec 2018 02:44 PM
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹனுமர் ஒரு தலித் என கருத்து கூறி இருந்தார். இதன் எதிரொலியாக அவரது மாநிலத்தின் முசாபர்நகரில் உள்ள ஹனுமர் கோயில் பிராமணரை விலக்கி புரோகிதராக ஒரு தலித் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 7-ல் (நாளை) நடைபெறும் ராஜஸ்தான் தேர்தலுக்காக கடந்த வாரம் அங்கு பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தார் உ.பி. முதல்வர் யோகி. அப்போது, ஹனுமர் பற்றிக் குறிப்பிட்டவர் அவர் ஒரு தலித் எனக் கூறிய கருத்து சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள முசாபர் நகரின் தலித் அமைப்புகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கின. இங்கு பிரபலமான சங்கட் மோர்ச்சன் எனும் ஹனுமர் கோயிலில் இருந்த பிராமணப் புரோகிதரை மாற்றி தலித் சமூகத்தை சேர்ந்தவரை அமர வைத்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் புதிய புரோகிதரான தீபக் கம்பீர் கூறும்போது, ''ஆதித்யநாத்தை ஒரு அரசியல் சட்டப் பொறுப்பாளர் மற்றும் இந்து மதப்பிரச்சாகராகக் கருதுகிறோம். இவர் கூறுவது அனைத்தும் எங்களுக்கு கடவுள் வாக்கு போல என்பதால் அவர் ஹனுமர் ஒரு தலித் என்பதையும் ஏற்கிறோம். எனவே, ஹனுமர் கோயிலில் தலித்தான என்னைப் புரோகிதராக அமர்த்தியுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
இதனிடையில், தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் தீபக் கம்பீரை கோயிலில் இருந்து வெளியில் அனுப்பினர். இதனால், முதல்வர் யோகியின் சொல்லுக்கு அவமானம் நேர்ந்திருப்பதாகவும், போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் உ.பி.யின் தலித் அமைப்பான ‘வால்மீகி கிராந்தி தளம்’ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT