Last Updated : 13 Dec, 2018 10:12 AM

 

Published : 13 Dec 2018 10:12 AM
Last Updated : 13 Dec 2018 10:12 AM

4 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் தள்ளுபடி: விவசாயிகளைக் கவர மோடி அரசு திட்டம்

3 மாநிலங்களில் ஆட்சியை இழந்ததையடுத்து, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளைப் பெறும் நோக்கில், 4 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இந்தி பேசும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.

இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் 3 மாநிலங்களில் உள்ள கிராமப்புற விவசாயிகளைக் கண்டுகொள்ளாததால், அவர்களின் தேவையை சரிவர நிறைவேற்றாத காரணத்தால் அதிருப்தி ஏற்பட்டு அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதேபோன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்திய அரசு மீது பல்வேறு காரணங்களால் அதிருப்தியில் இருக்கின்றனர். சீமீபத்தில் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தினார்கள்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் அதிருப்தியைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக, 26.30 கோடி விவசாயிகளின் ஆதரவைப் பெறும் நோக்கில் மத்தியில் ஆளும் மோடி அரசு பல்வேறு நடவடிக்கையில் விரைவில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதில் குறிப்பாக விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையான வேளாண் கடன் தள்ளுபடி அளிப்பது குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாத்தி கூறுகையில், “ மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனால், விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சினைகளையும் அரசு தீர்க்கவில்லை. அதனால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது நன்கு அறிந்த விஷயம். இதைச் சரிக்கட்டவும் விவசாயிகள் ஆதரவைப் பெறவும் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பதுதான் ஒரேவழி” எனத் தெரிவித்துள்ளார்.

ஆதலால், விரைவில் நாடு முழுவதும் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்று மத்திய அரசு வட்டாரங்களும், பொருளாதார ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பது தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றிக்குக் கைகொடுக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.72 ஆயிரம் கோடிக்கு வேளாண் கடன் தள்ளுபடி அறிவித்து, அதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கும் என்று அந்தஅதிகாரி தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

அதேசமயம், வேளாண் கடன் தள்ளுபடி அறிவித்தால், அரசின் நிதிப்பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்காமல் இருந்தாலே நாட்டின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 3.5 சதவீதமாக இருக்கும் என்ற பட்சத்தில் தள்ளுபடி அறிவித்தால் கடுமையாக உயரும் என்று சில கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே அரசு வங்கிகள் வாராக்கடனால் சிக்கித் தவித்து வரும் நிலையில், வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பு வங்கிகளின் நிலையைப் பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் தர்மேந்திரா மாலிக் கூறுகையில் “ மத்திய அரசு மீது விவசாயிகள் கடும் கோபத்தில் இருப்பதை 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிட்டன. மாநில அரசுகள் இருக்கும் நிதிச் சிக்கலில் நிச்சயம் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்கமாட்டார்கள் என்பது விவசாயிகளுக்கு நன்கு தெரியும். ஆதலால், மத்திய அரசு மட்டுமே வேளாண் கடன் தள்ளுபடி அளிக்க முடியும் ” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு பாஜக ஆட்சியை இழந்ததற்கு முக்கியக் காரணம் கிராமப்புறங்களில் உள்ள வாக்குகளையும், விவசாயிகளின் ஆதரவைப் பெறாததுமே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேளாண் கடன் தள்ளுபடி நடவடிக்கை என்பது மிகவும் புகழ்பெற்ற நடவடிக்கையாகும். இதற்குமுன் பல தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேளாண் கடன் தள்ளுபடியை அறிவித்து ஆட்சியைப் பிடித்துள்ளன. 7 மாநில அரசுகள் ரூ.1.80 கோடிக்கு வேளாண் கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று உறுதியளித்து இருக்கின்றன.

வேளாண் கடன் தள்ளுபடி தவிர்த்து, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி, அதிக அளவு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x