Published : 22 Dec 2018 03:16 PM
Last Updated : 22 Dec 2018 03:16 PM
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்கும் மு.க.ஸ்டாலின் கருத்திற்கு எதிர்க்கட்சிகளில் முதல் தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா ஆதரவளித்துள்ளார். ராகுலுக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்பளித்து பொதுமக்களின் முடிவிற்கு விட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று டெல்லியின் ஒரு விழாவில் பேசிய ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் கூறும்போது, ‘மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்து ராகுல் தனது தைரியத்தை நிரூபித்துள்ளார். எனவே, அவர் இனி பப்பு இல்லை. அவர் ஒரு நல்ல பிரதமராக இருப்பார். இதற்காக ராகுலுக்கு போட்டியிட வாப்பளித்து பொதுமக்களின் முடிவிற்கு விட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
இந்திய அரசியலில் இதுபோல் முக்கியப் பதவிகளுக்கு எவரும் எதிர்பாராத தலைவர்கள் முன்னிறுத்தப்பட்டு, வென்றிருப்பதையும் அப்துல்லா சுட்டிக் காட்டினார்.
இதன் மீது பரூக் அப்துல்லா கூறுகையில், ‘ஒரு பைலட்டாக இருந்த ராஜீவ் காந்தி நம் நாட்டின் பிரதமராக வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவரது ஆட்சியில் நம் நாட்டு பொருளாதாரம் தாராளமயமாக்கம் செய்யப்பட்டது. எனது மகன் உமர் அப்துல்லா ஜம்மு-காஷ்மீரின் முதல்வராவார் என நானே எதிர்பார்க்கவில்லை.’ எனத் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த திமுகவின் விழாவில் பேசிய அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாம் முன்மொழிவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எந்த தலைவரும் ஆதரவளிக்காமல் எதிர்கட்சிகள் இடையே அதிருப்தி கிளம்பியது.
இந்தவகையில், பரூக் அப்துல்லாவும் துவக்கத்தில் அதிருப்தி காட்டியவர் தற்போது ஸ்டாலின் கருத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார். இது எதிர்கட்சி தலைவர்கள்
இடையே ராகுல் மீதான கருத்தின் மீது மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT