Published : 16 Dec 2018 01:43 PM
Last Updated : 16 Dec 2018 01:43 PM
அடுத்த வருடம் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடத் தயாராகிறது. ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கரில் அக்கட்சிக்கு தனியாகப் போட்டியிட்டு ஆட்சி அமைத்திருப்பது காரணம் ஆகும்.
மக்களவை தேர்தலின் அரைஇறுதிப் போட்டியாகக் கருதப்படுவது தற்போது முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல். இதில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருந்த பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி மற்றும் சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் கடைசி நேரத்தில் காங்கிரஸுடன் சேர மறுத்து விட்டனர்.
இதனால், அம்மூன்று கட்சிகளுமே ராஜஸ்தான், மபியில் தனித்து போட்டியிட்டன. சத்தீஸ்கரில் மாயாவதி அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார்.
இந்த மூன்று மாநில முடிவுகளில் காங்கிரஸ், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது. மபியில் குறைந்த இரண்டு தொகுதிகளுக்கு மாயாவதி, அகிலேஷ் தானாக முன்வந்து ஆதரவளித்துனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சி தலைமைக்கு நம்பிக்கை பிறந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்காக எந்த கட்சிகளையும் எதிர்பார்ப்பதை நிறுத்த விரும்புகிறது.
தமக்கு விருப்பமான வகையில் தொகுதிப் பங்கீடு நடந்தால் ஒழிய கூட்டணி வைப்பதில்லை என்ற மனநிலைக்கு காங்கிரஸ் மாறத் துவங்கியுள்ளது. எனவே, முதல் மாநிலமாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவரான சோமன் மித்ரா கூறும்போது, ’ஆளும் திரிணமூல் காங்கிரஸினரால் எங்கள் கட்சியினர் அன்றாடம் தாக்கப்படுகின்றனர். பொய்யான வழக்குகள் எங்கள் மீது பதிவாகி வருகின்றன. எனவே, எங்கள் கட்சி வலிமையுடன் இங்கு மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.’ எனத் தெரிவித்தார்.
எனினும், காங்கிரஸிடம் வழக்கமாக நிலவும் கோஷ்டி பூசல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முன்னாள் மாநில தலைவர் அதிர் சவுத்ரி மற்றும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான அப்துல் மன்னான், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மற்றொரு கோஷ்டியான, சுபாங்கர் சக்ரவர்த்தி, ஏ.எச்.கான் போன்ற தேசியத் தலைவர்களின் திரிணமூலுடன் கூட்டணி இன்றி வெல்வது கடினம் எனக் கூறி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸிடம் இருந்த ஆட்சியை பறித்த இடதுசாரிகள் சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தன.
காங்கிரஸில் இருந்து பிரிந்த மம்தா, இடதுசாரிகளை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்கிறார். இதனிடையில், இதுவரை இல்லாதவகையில் பாஜகவும் அங்கு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT