Last Updated : 25 Dec, 2018 09:24 AM

 

Published : 25 Dec 2018 09:24 AM
Last Updated : 25 Dec 2018 09:24 AM

ஈவுஇரக்கம் பார்க்காதீங்க சுட்டுத் தள்ளுங்க, பிரச்சினை வராது: கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி பேச்சால் சர்ச்சை

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை ஒரு கும்பல் கொலை செய்துவிட்டதை அறிந்த கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, 'இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளுங்கள், பிரச்சினை வராது' என்று செல்போனில் பேசிய காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகருமான பிரகாஷ் என்பவரை நேற்று மாலை மைசூரு சாலையில் காரின் சென்றபோது, ஒரு கும்பல் அவரை மறித்து வெட்டிக் கொலை செய்தது. இதனால் மைசூரு சாலையிலும், திண்டுக்கல் பெங்களூரு சாலையிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நேற்று மாலை மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் குறித்து முதல்வர் எச்.டி.குமார சாமியிடம் சிலர் செல்போனில் கொலை நடந்த சிறிது நேரத்தில் தகவல் தெரிவித்தனர். அப்போது, அவர் செல்போனில் பேசியதை ஊடகத்தினர் பதிவு செய்துள்ளனர். குமாரசாமி பேசுகையில்” பிரகாஷ் மிகவும் நல்லவர். எதற்காக அவரைக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. பிரகாஷை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றுவிடுங்கள். பிரச்சினை ஒன்றும் வராது” என்று பேசினார்.

 

முதல்வர் எச்.டி. குமாரசாமியின் பேச்சு குறித்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பாகியது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக, மாநிலத்தில் குமாரசாமி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று விமர்சித்தது.

பாஜக எம்.பி. சோபா கரண்ட்ராஜே கூறுகையில், “ முதல்வர் குமாரசாமியின் உத்தரவு சர்வாதிகாரித்தனம், சட்டத்துக்கு விரோதமாகச் சுட்டுத்தள்ள உத்தரவிட்டது கேமிராவில் பதிவாகியுள்ளது. வெளிப்படையாக அவர் வன்முறையைத் தூண்டுகிறார். குமாரசாமியின் இந்த சர்வாதிகாரத்தனத்தையும், அட்டூழியத்தையும் கண்டிக்கூடியதாகும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், செல்போனில் பேசியது குறித்து முதல்வர் குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, தான் யாரையும் சுட்டுக்கொல்லச் சொல்லவில்லை என்று தெரிவித்து தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

அவர் கூறுகையில், “ உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு வார்த்தைகள் வந்துவிட்டது. பிரகாஷை கொலை செய்தவர்களைக் கொல்லுங்கள் என்று நான் உத்தரவிடவில்லை. அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை வந்துவிட்டது. பிரகாஷை கொலை செய்தவர்களில் இருவர் சிறையில் இருந்தார்கள். கடந்த இரு நாட்களுக்கு முன்தான் ஜாமினில் வெளியே வந்தார்கள். வெளியே வந்தவுடன் பிரகாஷை கொலை செய்துள்ளார்கள். நீதிமன்ற ஜாமினை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

ஒரு மாநில முதல்வர் வெளிப்படையாக ஒருவரைச் சுட்டுத்தள்ளுங்கள், பிரச்சினையை பார்த்துக்கொள்ளலாம் என்று பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x