Published : 22 Dec 2018 08:33 PM
Last Updated : 22 Dec 2018 08:33 PM
தமிழகத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக உயந்ர்திருப்பதாக நேற்று மாநிலங்களவையில் மத்திய மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுபிரியா பட்டேல் தெரிவித்தார்.
இது குறித்த கேள்வியை திமுக அவைத்தலைவர் கனிமொழி எழுப்பியமைக்கு அளித்த பதிலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சிகளின் முடிவாக, ‘மூன்றாண்டுகளில் (2012-14) மக்கள் தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகள், பெங்களூரு’ என்ற அறிக்கை 2016-ல் வெளியிடப்பட்டது.
சென்னை ஆண்களிடம் புற்றுநோய் தாக்கம்
இந்த புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க அளவு புற்றுநோய் தாக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் தாக்கத்தின் வருடாந்திர சதவிகித மாற்றம் என்பது பெங்களூருவில் 0.39 முதல் 0.93 சதவிகிதமாக இருக்கிறது. சென்னையில் ஆண்களிடம் புற்றுநோய் தாக்கம் 0.38% அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகரிப்பு
அரசிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன. 2015-ல் 78,512, 2016-ல் 80,999 என்றிருந்த எண்ணிக்கை, 2017-ல் 83,554 பேர் என புற்றுநோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
மத்திய அரசின் முழுஉதவி
புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மத்திய, மாநில மருத்துவ நிறுவனங்களால் வறுமைக் கோட்டுக்கு கீழே
இருப்பவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானியத்துடனும் வழங்கப்படுகிறது. மேலும் மாநில அரசுகள் நடத்தும் புற்றுநோய் தடுப்பு, விழிப்புணர்வு, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்கிறது. மாநிலங்களுக்கு அதிகபட்ச நிதி ரூ.120 கோடி
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேசிய அளவில் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதய நோய், பக்கவாத நோய்கள் ரீதியாகவும் இவை நடத்தப்படுகின்றன. மாநில புற்றுநோய் நிலையங்களுக்கு அதிகபட்சமாக ரூ.120 கோடியும், யூனியன் பிரதேச புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கு அதிகபட்சமாக ரூ.45 கோடி நிதியும் மத்திய அரசு வழங்குகிறது.
தமிழகத்திற்கு ரூ.67.38 கோடி
இதில் மாநில அரசுகளின் பங்கு 40 சதவிகிதமாக இருக்கும். இந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்துக்கு மத்திய அரசு ரூ.67.38 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது இதுதவிர வட கிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் தடுப்பு மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசே 90 சதவிகித மானியத்தை வழங்குகிறது.
மருத்துவ நிதிஉதவிகள்
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களில் உயிருக்கு அச்சுறுத்தலான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ் நிதிஉதவி அளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சரின் புற்றுநோய் நிதியம், மாநில நோய் சிகிச்சை நிதியம் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து நிதிஉதவிகள் அளிக்கப்படுகின்றன. மலிவுவிலை மருந்துகள்
அம்ருத் திட்டத்தின் கீழ் மலிவு விலை மருந்து விற்பனையகங்கள் 23 மாநிலங்களில் 145 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய், இதய நோய் தொடர்பான மருந்துகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் மருந்தகங்களிலும் மலிவு விலை மருந்துகள் விற்கப்படுகின்றன.
புற்றுநோய் தகவலுக்கான இணையதளம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை www.cancerindia.org.in என்ற வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளன. ‘புற்றுநோய்க்கு எதிராக இந்தியா’ என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படும் இந்த வலைத் தளத்தில் இந்தியாவில் அதிகம் தாக்கும் புற்றுநோய் வகைகள், அதுபற்றிய விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவான வகையில் விளக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT