Published : 11 Dec 2018 03:36 PM
Last Updated : 11 Dec 2018 03:36 PM
தற்போது வெளியாகி வரும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் சுமார் 24 தொகுதிகளில் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கின்றனர்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 15 தொகுதிகளில் முன்னணி வகித்தனர். அதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்தது. தற்போது, காங்கிரஸை விட பாஜக இரு தொகுதிகள் அதிகமாக முன்னணி வகிக்கிறது.
ம.பி.யில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 109, பாஜக 111 மற்றும் பகுஜன் சமாஜுக்கு நான்கு தொகுதிகளில் முன்னணி நிலை தெரிகிறது. இவற்றில் 14 தொகுதிகளில் பாஜக, 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 200 முதல் 1000 வாக்குகளில் முன்னிலை வகிக்கிறனர்.
இதனால், ம.பி.யின் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைக் கணிக்க முடியாத நிலைஉள்ளது. ஏனெனில், இந்த 24 தொகுதிகளின் முன்னிலை வாக்குகளின் வித்தியாசம் பாஜக அல்லது காங்கிரஸ் என எந்தக் கட்சிக்கு சாதகமாக வேண்டுமானாலும் செல்லலாம்.
ம.பி.யில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்தது. இங்கு அக்கட்சியின் சிவராஜ்சிங் சவுகான் நான்காவது முறை முதல்வராகும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதேசமயம், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன.
எனவே, ம.பி. மாநில சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இந்தமுறை முதன்முறையாக அதன் முடிவுகள் வித்தியாசமாக வெளியாகி வருகிறது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் அதன் இறுதி முடிவுகள் வெளியாகி விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT