Published : 07 Dec 2018 04:50 PM
Last Updated : 07 Dec 2018 04:50 PM
பசுப்பாதுகாப்பின் பெயரில் மனித உயிர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’ என புலந்த்ஷெஹர் கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் குமார் சிங் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தனியார் இந்து செய்தி தொலைக்காட்சிக்கு அபிஷேக் அளித்த பேட்டியில் கூறியதாவது: ’பசுப்பாதுப்பிற்காக கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்து-முஸ்லிம் பெயரில் நாம் இனியும் மோதிக்கொண்டிருந்தால், பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் நம் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.
இதன் மீது நான் உ.பி.வாசிகளுக்கு மட்டும் அன்றி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மக்களிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பசுப்பாதுகாப்பின் பெயரில் சட்டத்தை கையில் எடுப்பது மிகவும் தவறானது.
சட்டத்தை கையில் எடுத்தமையால் தான் இப்போது எனது தந்தை கொல்லப்பட்டார். நாளை இதுபோன்ற சம்பவத்தில் ஒரு உயர் அதிகாரியோ, அமைச்சரோ கொல்லப்படலாம்.
இதற்காக, ‘கும்பல் படுகொலை கலாச்சாரம்’ தொடர வேண்டுமா? தயவு செய்து அதை நிறுத்தி விடுங்கள். எனது தந்தையின் கனவு ஒன்று இருந்தது. அதில் அவர், தன் பிள்ளைகள் உயரிய பணியில் அமர்கிறார்களோ இல்லையோ? ஒரு நல்ல நாகரீக மனிதராக வாழக் கற்க வேண்டும் என விரும்பினார்.
நம் பாரத மாதா அனைவருக்குமானவர்! அவருக்காக தம் உயிரையும் அர்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். நம் நாட்டின் அனைத்து மதங்களும் சமமானவை. இதில் எந்த ஒன்றை விட மற்றொன்று பெரியதில்லை.’ இவ்வாறு அபிஷேக் உருக்கமாக வேண்டியுள்ளார்.
கலவரத்தை விசாரித்து வரும் உபி போலீஸ் படை, பசுக்களின் எலும்புகள் எங்கிருந்து வந்தவை என கண்டுபிடித்து அறிவிப்பதும் முக்கியம் எனவும் அபிஷேக் தன் பேட்டியில் வலியுறுத்தி உள்ளார். இந்த பேட்டி வட மாநிலங்களிம் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பலரது பாராட்டுக்கள் அபிஷேக்கிற்கு குவிந்தும் வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT