Published : 11 Dec 2018 05:10 PM
Last Updated : 11 Dec 2018 05:10 PM
இன்னும் 5 நாட்கள்தான்… வரும் 16-ம் தேதியோடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடையப் போகிறது.
முள் கிரீடத்தோடுதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். ஏனென்றால், பாஜக ஆட்சிக்கு வந்த பின் நடந்த மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி தான் தக்க வைத்திருந்த மாநிலங்கள் அனைத்தையும் இழந்திருந்தது.
பஞ்சாப், புதுச்சேரி, மிசோரம் தவிர காங்கிரஸ் கட்சி எங்கும் ஆட்சியில் இல்லாத கடினமான சூழலில்தான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். ‘காங்கிரஸ் முக்த் பாரத்’(காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற கடுமையான விமர்சனத்தை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது.
இமாச்சலப் பிரதேச தோல்வியோடு தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி நாட்டின் மிகப் பழமையான கட்சி(ஜிஓபி) என்று அழைக்கப்படும் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு ராகுல் வழிநடத்தப்போகிறார்? என்று கேள்வி எழுந்தது.
அனுபவம் இல்லாதவர், சிறுபிள்ளை, ‘பப்பு' என்றெல்லாம் பாஜக தலைவர்களின் ஏளனப் பேச்சுக்கும், கிண்டலுக்கும் ராகுல் ஆளானார். ராகுல் காந்தியின் ஆளுமை மீது மிகப்பெரிய சந்தேகம் பதியவைக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஓர் ஆண்டில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், பகடிகள், தரம்தாழ்ந்த பேச்சுகள் அனைத்துக்கும் தனது நாகரிகமான செயல்பாடுகள், கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தியது, குறிப்பிடத் தகுந்த வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து, எதிர்க்கட்சிகள் மீதான கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தது ஆகியவற்றின் மூலம் ராகுல் பதிலடி கொடுத்து இருக்கிறார் என்றே கூறலாம்.
கடந்த ஓர் ஆண்டில் சட்டப்பேரவைத் இடைத்தேர்தல்கள், சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற இடைத்தேர்தல் எனப் பலவற்றை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது.
இதில் குறிப்பாக ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் ஆல்வார், அஜ்மரில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவிடம் இருந்து வெற்றியைப் பறித்தது காங்கிரஸ் கட்சி. இதுதான் ராகுல் காந்தி தலைமைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அதன்பின் நடந்த மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மேகாலயா தவிர மற்ற இரு மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை.
மேகாலயா மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்றபோதிலும் பாஜகவின் சில அரசியல் தந்திர நடவடிக்கையால் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதை மிகச்சிறந்த பாடமாக எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் சாதுர்யமாக காய்களை நகர்த்தினார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தபோதிலும், தங்களால் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், கூட எச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து பாஜகவைக் காலூன்ற விடாமல் அரசியல் 'செக்' வைத்தார்.
கர்நாடகச் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க பகீரதப் பிரயத்தனங்கள் செய்தும் அதை ராகுல் காந்தி முறியடித்து முட்டுக்கட்டை போட்டது அனைவராலும் கவனிக்கப்பட்டது.
தன்னை ‘பப்பு’, சிறுபிள்ளை என்று விமர்சித்தவர்களைச் சிந்திக்க வைத்தார் ராகுல் காந்தி. அதன்பின் மத்திய அரசின் ஒவ்வொரு தவறுகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும், தவறான பொருளாதாரக் கொள்கைகளையும் ராகுல் விமர்சித்த விதம் கூர்ந்து நோக்கப்பட்டது.
குறிப்பாக பண மதிப்பிழப்பு விவகாரத்தை ராகுல் காந்தி எடுத்துப் பேசியவிதம் வடமாநில மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் மத்திய அரசின் ஒவ்வொரு நகர்வையும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் அரசுக்கு என்ன நஷ்டம், யாரெல்லாம் ஆதாயம் அடைகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு பேசியது மக்களிடத்தில் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
பண மதிப்பு நீக்கத்தால் சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்ட விதம், விவசாயிகள் அனுபவித்து வரும் வேதனை, கடன் தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி செய்த விமர்சனங்கள் கவனம் பெற்றவை.
கடந்த ஓர் ஆண்டில் ராகுல் காந்தி பல்வேறு தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றில் பங்கேற்றபோதிலும் எந்த ஒரு சூழலிலும் தனிநபர் குறித்த விமர்சனங்களை வைக்காமல் மத்திய அரசின் மீதான விமர்சனத்தை மட்டுமே முன்வைத்து நாகரிகமான அரசியலுக்கு வழிகாட்டினார்.
அதுமட்டுமல்லாமல் தனது கட்சியின் மூத்த தலைவர்கள் தடம்மாறி எதிர்க்கட்சியினரை விமர்சித்தபோதிலும், அதைக் கண்டிக்கவும் ராகுல் தவறவில்லை.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது ராகுல் காந்தியின் முதிர்ச்சியான உரை அனைவராலும் கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடி முதல் எதிர்க்கட்சியினர் அனைவரின் புருவத்தை உயர்த்தச் செய்தது, பெரும்பாலான மக்களாலும் பாராட்டப்பட்டது.
2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ‘மகாபந்தன்’ என்ற மகா கூட்டணியை ராகுல் காந்தி உருவாக்கி வருவதும் பாஜகவின் கவனிப்பைப் பெற்றுள்ளது. பிரதமர் வேட்பாளர் இல்லாத கட்சி என்று மகாகூட்டணியை உடைக்க விமர்சனங்களை பாஜக முன்வைத்தபோதிலும், அதை சாதுர்யமாகவே ராகுல் காந்தி கையாண்டு வருகிறார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்பது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மீள்எழுச்சி பெற்றுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
மத்தியப் பிரேதசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை இழந்திருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அரியணையில் ஏறி உள்ளது.
இதை பாஜக மீதுள்ள வெறுப்பை அறுவடை செய்துள்ளது என்பதைக் காட்டிலும் மக்களிடம் இழந்த நம்பிக்கையை ராகுல் காந்தியின் தலைமை மீட்டெடுத்துள்ளது என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.
கடந்த 2013-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் 58 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் தற்போது 115 தொகுதிகளை வெல்லும் சூழலில் இருக்கிறது. அதேபோல ராஜஸ்தானில், 2013-ம் ஆண்டில் 21 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 104 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கரில் கடந்த 2013-ம் ஆண்டு 39 தொகுதிகள் பெற்ற நிலையில், தற்போது 62 தொகுதிகளுடன் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதேசமயம் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும், தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி தனது இருப்பைத் தக்கவைக்க தவறியிருப்பது கவனிக்கப் படவேண்டியது.
இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் இருந்து 3 மாநிலங்களை காங்கிரஸ் மீட்டிருப்பதன் மூலம் ராகுல் காந்தியின் தலைமை மீதான நம்பிக்கையை எதிர்க்கட்சிகளிடையே அதிகரிக்கச் செய்திருக்கிறது,
பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கரங்களை வலுப்பெறச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மீதான நம்பிக்கையை மக்களிடையே வளர்க்க உதவி இருக்கிறது.
ஒருவேளை இதில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படாமல் இருந்திருந்தால், மோடியின் வளர்ச்சி விஸ்வரூபமெடுத்திருக்கும். இந்தத் தோல்விகள் மோடியின் பிம்பத்தைக் காட்டி 2019-ம் ஆண்டு தேர்தல் சந்திக்க இருந்த பாஜகவுக்கு 'செக்' வைத்திருக்கிறது.
இனிமேலும் ராகுல் காந்தியை 'பப்பு' என்று அழைக்கமாட்டார்கள். தேர்தல் தேர்வில் ராகுல் காந்தி பாஸ் ஆகிவிட்டார்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT