Published : 24 Dec 2018 07:36 PM
Last Updated : 24 Dec 2018 07:36 PM
இந்துக்களின் கடவுளான ஹனுமர் குறிப்பிட்ட சமூகம் அல்லது மதத்தை சேர்ந்தவர் என பாஜகவினர் கருத்து கூறி வருகின்றனர். இதற்கு உபி மாநில கோயில் மடாதிபதிகள், சாதுக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து அயோத்தியின் நிர்மோஹி அகாடாவின் தலைவரான மஹந்த் ராம்தாஸ் கூறும்போது, ‘கடவுளான ஹனுமர் மீது வெறுப்புட்டுகிற வகையில் கருத்து கூறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் லாபத்திற்காக கடவுளின் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்கது.’ எனத் தெரிவித்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோயிலின் தலைவரான மஹந்த் ராஜூதாஸ் கூறும்போது, ‘தங்கள் சொந்த விருப்பங்களுக்காக அனாவசியமாக கடவுளின் பெயரை இழுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் மிகவும் வருந்தக் கூடியவன்.’ எனத் தெரிவித்தார்.
லக்னோவின் அனுமன் சேது கோயிலின் அர்சகரான பகவான் சிங் பிஷ்த் கூறும்போது, ‘கடவுளை போய் எப்படி ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் மதத்தில் சேர்க்க முடியும். இயற்கையின் பிள்ளைகளான பூமி, வானம், நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகியவற்றை போல் கடவுள்களுக்கும் ஜாதி, மதம் கிடையாது.’ எனத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 27-ல் ராஜஸ்தானில் செய்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் யோகி, ஹனுமரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் எனக் கூறி சர்ச்சையை துவக்கினார். இதையடுத்து, உ.பி மாநில மேலவை உறுப்பினரான புக்கல் நவாப், ஹனுமன் ஒரு முஸ்லிம் எனக் கூறி பலரையும் அதிர வைத்தார்.
பிறகு, ஹனுமர் தம் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர் என உபி மாநில சிறுபான்மைத்துறை அமைச்சரான லஷ்மி நாராயண் சவுத்ரி தெரிவித்திருந்தார். கடைசியாக டெல்லியின்
பாஜக எம்பியான உதித்ராஜ் ஹனுமரை ஒரு ஆதிவாசி எனவும் கூறினார்.
இதுபோல் தொடரும் கருத்துக்கள் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் பிறகாவது ஹனுமர் மீதான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சாதுக்கள் நம்பிக்கை வீணாகி உள்ளது.
ஹனுமர் ஒரு மல்யுத்த வீரர்
இதனிடையே, ஹனுமர் மீதான இன்றைய கருத்தாக உபி மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சேத்தன் சவுகான் கூற்று வெளியாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுகான், ஹனுமர் எந்த சமூகத்தை சேர்ந்தவரல்ல எனவும், ஆனால் அவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர் என்றும் கருத்து கூறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT