Published : 09 Aug 2014 09:06 AM
Last Updated : 09 Aug 2014 09:06 AM
பூலான் தேவி கொலை வழக்கில் ஒருவரைக் குற்றவாளி என அறிவித்தும், 10 பேரை விடுதலை செய்தும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பல் கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் பூலான் தேவி. இவர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீர்சாபூர் தொகுதி எம்பி-யாக இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு டெல்லியில் அசோகா சாலையில் உள்ள அவரது வீட்டு முன்பு 12 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக ஷேர்சிங் ராணா உள்ளிட்ட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பூலான்தேவி கொள்ளைக்காரியாக இருந்த போது உயர் சமூகத்தைச் சேர்ந்த வர்களை கொன்றதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இக் கொலை நடந்ததாக விசாரணை யில் தெரியவந்தது.
இவ்வழக்கில், அரசு தரப்பில் 171 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இருதரப்பு விசாரணைக்குப் பின், டெல்லி கூடுதல் குற்றவியல் நீதிபதி பரத் பராசர் வெள்ளிக் கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், முக்கிய குற்றவாளியான ஷேர் சிங் ராணா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மற்ற 11 பேரில் பிரதீப் என்பவர் கடந்த ஆண்டு திகார் சிறையில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார்.
வழக்கில் தொடர்புடைய தன்பிரகாஷ் சேகர், ராஜ்வீர், ராஜீந்தர், அமித் ரத்தி, பிரவீன் மிட்டல், கேசவ் சவுகான், சுரீந்தர் சிங், விஜய், முஸ்தாகீன், சிராவன் ஆகிய 10 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவாளிக்கான தண்டனை வரும் 12-ஆம் தேதி அறிவிக்கப் படவுள்ளது.
இதன்மூலம், கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்த பூலான் தேவி கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT