Published : 11 Nov 2018 02:25 PM
Last Updated : 11 Nov 2018 02:25 PM
அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.20 கோடி லஞ்சம் கொடுப்பதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை போலீஸார் இன்று கைது செய்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்காக மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் நின்று வேதனைப் பட்ட நேரத்தில் ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினார். பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவே மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்த நிலையில், ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு நடத்திய திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து பெரும் பணக்காரர். கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சியின்போது, அமைச்சராகவும் ஜனார்த்தன ரெட்டி இருந்தார்.
சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி கொடுத்த வழக்கில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா இறங்கியபோது, ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜனார்த்தன் ரெட்டி 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த காலத்தில் 'பரீத் என்பவர் ஆம்பிடென்ட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகமான லாபம் தருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் முதலீடு செய்தனர்.
குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே லாபம் வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை, இதனால், போலீஸிடம் நிறுவனத்தின் அதிபர் பரீத் மீது ஏராளமான புகார்கள் தரப்பட்டன. அமலாக்கப் பிரிவும் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
அலிகான் என்பவர் மூலம் அப்போது அமைச்சராக இருந்த ஜனார்த்தன் ரெட்டியைச் சந்தித்த பரீத் தன்னை அமலாக்கப்பிரிவு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளார். வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 கோடி லஞ்சமாகத் தர வேண்டும் என்று ஜனார்த்தன் ரெட்டி கேட்டுள்ளார். இதை பணமாகத் தராமல், பெங்களூருவில் அம்பிகா ஜுவல்லரிஸ் நடத்திவரும் ரமேஷ் கோத்தாரி என்பவர் மூலம் தங்கமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அம்பிகா ஜுவல்லரிஸ் நடத்தி வரும் ரமேஷ் கோத்தாரி, 57 கிலோ தங்க நகையை பெல்லாரியில் ராஜ்மஹால் பேன்ஸி நகைக்கடை நடத்திவரும் ரமேஷ் என்பவரிடம் நகையை ஒப்படைத்ததுள்ளார். ரமேஷிடம் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தன் ரெட்டிக்கு நெருங்கிய நண்பரான அலிகானிடம் நகைகளை ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரூ.18 கோடி மதிப்புள்ள நகைகள் தற்போது மாயமாகியுள்ளன.
இந்நிலையில், சையத் அகமது தனது நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ. 600 கோடி வரை மோசடி செய்துள்ளதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் சையத் அகமது ஃப்ரீதை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி அவருடன் நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்யத் தேடி வந்தனர். . துணை ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 4 படைகள் அமைத்து பெங்களூரு, பெல்லாரி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி தனது வழக்கறிஞர் மூலம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் இன்று ஜனார்த்தன ரெட்டியை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையர் ஆணையர் அலோக் குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,நிதி மோசடி வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள், சாட்சிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்துள்ளோம். விரைவில் ஜனார்த்தன ரெட்டியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவோம். விரைவில் பணத்தை மீட்டு முதலீட்டாளர்களுக்கு அளிப்போம். ஜனார்த்தன ரெட்டிக்கு மிக நெருக்கமாக இருந்த அலிகான் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT