Last Updated : 20 Aug, 2014 08:27 AM

 

Published : 20 Aug 2014 08:27 AM
Last Updated : 20 Aug 2014 08:27 AM

அர்ச்சனா ராமசுந்தரம் வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அர்ச்சனா ராமசுந்தரம் வழக்கில் மத்திய அரசு தெளிவான முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசு பணியான சிபிஐ கூடுதல் இயக்குநர் பொறுப்பில் சேர்ந்தார்.

தமிழக அரசு அவரை சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கும் முன்பே அவர் பணியில் சேர்ந்ததால் சர்ச்சை எழுந்தது. அவரது நியமனம் செல்லாது என்று வினித் நாராயண் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோட்டகி, ‘அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசுப் பணியில் சேர தமிழக அரசு 2013-ம் ஆண்டே ஒப்புதல் அளித்துவிட்டது.

அதன்படி அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு பதவி வழங்கப்பட்டது. தமிழக அரசு மூன்று மாதங்களாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசின் அமைதியை ஒப்புதலாகக் கருதி மத்திய அரசு அர்ச்சனா ராமசுந்தரத்தை பணியில் சேர உத்தரவிட்டது. இது சட்டப்பூர்வமானது’ என்று வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி லோதா, ‘தமிழக அரசு தன் பணியில் உள்ள அதிகாரியை விடுவிக்காவிட்டால், மத்திய அரசு நேரடியாக அவரை நியமித்துக் கொள்ள சட்டத்தில் இடமுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அட்டர்னி ஜெனரல், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியாளர் சட்டத்தின்படி, அவர் மத்திய அரசின் அதிகாரிதான். அவரது பணி நியமனத்தை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு’ என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘தமிழக அரசு 2013-ம் ஆண்டு மூன்று அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு தகுதியானவர்கள் என்றுதான் பட்டியல் அளித்தது. அதுவே ஒப்புதல் கிடையாது. தமிழக அரசு விடுவித்தால்தான் அவர் மத்திய பணியில் சேர முடியும்’ என்று வாதிட்டார்.

‘சிபிஐ உயர் அதிகாரிகளை நியமிக்க அமைக்கப்பட்டுள்ள குழு பச்னந்தா பெயரை பரிந்துரை செய்துள்ள நிலையில், பரிந்துரை செய்யப்படாத அர்ச்சனாவை எப்படி நியமித்தீர்கள்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ‘இந்த நியமனத்தில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே உள்ள இணக்கமான நிர்வாகம் பாதிக்கப்படும்.

தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தேவையின்றி அதிகாரி பாதிக்கப்படுகிறார். அவரை தமிழக அரசு ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ளது.

அவர் இந்த நியமனத்தில் இருந்து வாபஸ் பெற விரும்பினாலும் மத்திய அரசு ஒருமுறை சஸ்பெண்ட் செய்யும். எனவே இந்த விஷயத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தெளிவான முடிவை எடுத்து நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x