Last Updated : 28 Nov, 2018 01:58 PM

 

Published : 28 Nov 2018 01:58 PM
Last Updated : 28 Nov 2018 01:58 PM

பண மதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை: ‘பல்டி அடித்த’ மத்திய வேளாண் அமைச்சகம்

பிரதமர் மோடியால் கடந்த 2016-ம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தவிதமான விவசாயிகளும் பாதிக்கப்படவில்லை. பாதகமான விளைவுகள் ஏதும் வேளாண் துறையில் நடக்கவில்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம் தனது திருத்தப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 20-ம் தேதி நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் தாக்கல் செய்த அறிக்கையில், மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான விவசாயிகள் உரம், விதைகள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அளித்திருந்த நிலையில், இப்போது திடீர் பல்டி அடித்துள்ளது.

முதலில் தாக்கல் செய்த அறிக்கையில் தவறான தகவல் தரப்பட்டுள்ளது எனக்கூறி அதை திரும்பப் பெற்று புதிய அறிக்கையை 22-ம் தேதி தாக்கல் செய்துள்ளது. இந்தத் தவறான அறிக்கையைத் தாக்கல் செய்தமைக்காக வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், மற்றும் இணைச் செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மத்திய வேளாண் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் கூறுகையில், ’’கடந்த 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். என்னுடைய பார்வைக்கு வராமல் அறிக்கையை நிதிக்கான நிலைக்குழுவில் தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த அறிக்கையை என்னால் பார்க்க முடியவில்லை. முன்பு தாக்கல் செய்த அறிக்கையைத் தொகுப்பதில் தவறு நடந்துள்ளது. அதனால்தான் அரசு அதை திரும்பப் பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே நிதிக்கான நிலைக்குழுவில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை 'தி இந்து' (ஆங்கிலம்) ஆய்வு செய்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நீக்கத்தால் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், கடன் கிடைக்க பலவிதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன. கடனும் எளிதாக விவசாயிகளுக்குக் கிடைக்க வழி செய்யப்பட்டு இருந்தது.

கடந்த 2015-16ம் நிதியாண்டில் ராபி பருவத்தில் 612.28 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் கூடுதலாக விவசாயம் செய்யப்பட்டது. பண மதிப்பிழப்பு 2016, நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பின் அந்த நிதிஆண்டு முடிவதற்கு 4 மாதங்கள் மட்டுமே இருந்தன. ஆதலால், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

அதேசமயம், 2017-18-ம் நிதியாண்டில் பயிர் விளைச்சல் 635.29 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இருந்து, 628 லட்சம் ஹெக்டேராக மட்டுமே குறைந்தது.

பண மதிப்பிழப்பு கொண்டுவரப்படுவதற்கு முன் உணவு தானிய உற்பத்தி 2015-16 ஆம் ஆண்டில் 1254.50 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால், பண மதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட பின், 2016-17-ம் ஆண்டில் ராபி பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 1367.78 லட்சம் டன்னாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து 2017-18 ஆம் ஆண்டில் 1441.02 லட்சம் டன்னாக அதிகரித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதலில் தாக்கல் செய்த அறிக்கையை 'தி இந்து' (ஆங்கிலம்)ஆய்வு செய்தது. அதில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், சந்தையில் புழக்கத்தில் இருந்த பணம் வங்கிக்குச் சென்றது. பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரொக்கப் பணத்தை மட்டும் நம்பி இந்தியாவில் 26.30 கோடி விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த விவசாயிகளிடம் போதுமான பணம் கையிருப்பு இல்லாத காரணத்தால், ராபி பருவத்துக்குத் தேவையான விதைகளையும் உரத்தையும் வாங்க முடியவில்லை. மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் கூட நாள்தோறும் தங்கள் நிலத்தில் வேலைசெய்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், வேளாண் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் கடுமையான பணப் பற்றாக்குறை நிலவியதால், தேசிய விதைகள் கழகம் (என்எஸ்சி) கூட ஏறக்குறைய 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை விவசாயிகளிடம் விற்பனை செய்ய முடியாமல்போனது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு கோதுமை விதைகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு அனுமதி அளித்தும் விதைகள் விற்பனை சூடுபிடிக்கவில்லை'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையை திரும்பப் பெற்று புதிய அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய வேளாண் அமைச்சகத்தை, நிதிக்கான நிலைக்குழுவின் தலைவர் வீரப்ப மொய்லியும், உறுப்பினர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

நிலைக்குழுவில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில் “நிலைக்குழுவில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு, அதை திரும்பப் பெற்று திருத்தம் செய்து மற்றொரு அறிக்கையைத் தாக்கல் செய்வது வழக்கில் இல்லாத நடைமுறை. வேளாண் அமைச்சகத்தில் இருந்து ஏதேனும் அழுத்தம் தரப்பட்டதையடுத்து, அறிக்கை மாற்றப்பட்டு இருக்கும் என நினைக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x