Published : 04 Aug 2014 09:16 AM
Last Updated : 04 Aug 2014 09:16 AM

பிஹாரில் வெள்ள அபாயம்: லட்சம் பேர் வெளியேற்றம்

பிஹார் மாநிலத்தில் கோசி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் மங்கா கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக சனிக்கிழமை காலை குன்று ஒன்றிலிருந்து பெயர்ந்த கற்களும் மண்ணும் சங்கோஷி நதியின் குறுக்கே விழுந்ததில், பிஹாரை நோக்கி வரும் உபநதியான போட் கோசியில் நீரோட்டம் அடைபட்டு செயற்கை அணையாக மாறி உள்ளது. 2.5 கி.மீ. நீளம், 130 மீட்டர் ஆழத்துக்கு நீர் தேங்கி உள்ளது. நீர் இருப்பு சுமார் 27 லட்சம் கன அடியாக உள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட மண்மேட்டை அகற்றுவதற்காக, நேபாள ராணுவத்தினர் இரு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் சுமார் 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேறி வருவதால் கோசி ஆற்றில் 10 மீட்டர் உயரத்துக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, கோசி ஆற்றின் கரையோரங்களில் உள்ள 9 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை சிறப்பு செயலாளர் அனிருத் குமார் கூறும்போது, “கோசி ஆற்றின் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் சுமார் 4.25 லட்சம் பேரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 15 படைப்பிரிவுகள், மாநில பேரிடர் மீட்புப் படையின் 4 படைப்பிரிவுகள், ராணுவத்தின் 4 படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

200 பேரை காணவில்லை

நேபாள நிலச்சரிவில் 100 வீடுகள் புதைந்தன. மீட்பு நடவடிக்கையின்போது 8 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 200 பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களும் நிலச்சரிவில் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், 100 பேர் மட்டுமே காணவில்லை என நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x