Last Updated : 02 Nov, 2018 12:22 PM

 

Published : 02 Nov 2018 12:22 PM
Last Updated : 02 Nov 2018 12:22 PM

‘தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரைக் கொல்லவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை’- நக்சல் இயக்கம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரைக் கொல்லவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று நக்சல் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர், 12, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் நடவடிக்கையை சீர்குலைக்க நக்சல்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதனால் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் போலீஸாருடன் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டனர். ஆரன்பூர் காட்டுப்பகுதி வழியாக அவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீஸாரும் சென்றனர்.

திடீரென அக்டோபர் 30-ம் தேதி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹு, காவல் ஆய்வாளர் ருத்திர பிரதாப், காவலர் மங்கலு ஆகியோர் உயிரிழந்தனர்.

செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நக்சல் இயக்கத்தினர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், ''பதுங்கியிருந்த நிலையில் பிடிபட்ட தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த் சாஹு கொல்லப்பட்டார். ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதை மறுத்துள்ள தண்டேவாடா எஸ்பி அபிஷேக் பல்லாவ், ''சாஹு தவறுதலாகக் கொல்லப்பட்டார் என்றால் ஏன் கேமராக்கள் சூறையாடப்பட்டன? அதில் ஊடகவியலாளர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன.

உயிர்த் தியாகம் செய்த அச்சுதானந்த சாஹுவின் மண்டை சேதமடைந்திருந்தது. அவரின் உடலில் ஏராளமாக புல்லட் காயங்கள் இருந்ததும் தெரியாமல் நடந்ததா'' என்று நக்சல் இயக்கத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x