Published : 01 Nov 2018 02:14 PM
Last Updated : 01 Nov 2018 02:14 PM
தெலங்கனா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 11வயது சிறுவன், பிடெக், எம்டெக் சிவில், மெக்கானிக்கில் மற்றும் எலெக்ட்ரானிக் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் பாடம் எடுப்பது அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 11வயது மாணவர் முகமது ஹசன் அலி. இந்த சிறுவன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லும் ஹசன், 4 மணிக்கு பள்ளிமுடிந்ததும் அனைத்து மாணவர்களைப் போல் விளையாடிவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து வீட்டுப்பாடங்களைச் செய்கிறார்.
அதன்பின் 6 மணிக்கு மேல் பயிற்சி மையத்துக்குச் சென்று, பிடெக், எம்டெக் பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து, பயிற்சி அளிக்கிறார். இந்தப் பயிற்சிக்கு யாரிடமும் இருந்து எந்தவிதமான கட்டணத்தையும் பெறவது இல்லை. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
இது குறித்து ஹசன் அலி கூறியதாவது:
வரும் 2020-ம் ஆண்டுக்குள் ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்துடன் இருக்கிறேன். கடந்த ஆண்டில் இருந்து இந்தப் பயிற்சி அளிப்பதைத் தொடங்கி இருக்கிறேன். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் என்னுடைய வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு மாலையில் வகுப்பு எடுக்கிறேன். தற்போது நான் வகுப்பு எடுக்கும் பயிற்சி மையத்தில் 30 பிடெக், எம்டெக் மாணவர்கள் இருக்கிறார்கள்.
தகுதியான இந்திய பொறியியல் மாணவர்கள் கூட வெளிநாடுகளில் தங்களுக்கு தகுதியில்லாத பணிகளை செய்வதை வீடியோவில் பார்த்தேன். நம்முடைய இந்திய பொறியாளர்களுக்கு எந்தவிதமான திறமையில் பற்றாக்குறை இருக்கிறது, எதனால் தகுதிக்கு குறைவான பணியைச் செய்கிறார்கள் என்று சிந்தித்தேன். அவர்களுக்குத் தகவல்தொடர்பும், தொழில்நுட்பத்துறை பயிற்சியும் இல்லை என்பதை அறிந்தேன். எனக்கு கம்ப்யூட்டரில் டிசைனிங் பிரிவில் அதிகமான ஆர்வம், கணிதத்திலும் அதிகமான ஆர்வம். ஆதலால், பொறியியல் பிடிப்பவர்களின் பாடங்களைப் படிக்கத் தொடங்கி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன். இவ்வாறு ஹசன் அலி தெரிவித்தார்
ஹசன் அலியிடம் படிக்கும் பொறியியல் மாணவி சுஷ்மா கூறுகையில், கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கு வருகிறேன். ஹசன் அலி சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார். கற்றுக்கொள்ள மிகவும் எளிமையாக இருக்கிறது. எங்களைக் காட்டிலும் வயது குறைவாக இருந்தாலும், பாடங்களை எளிதாக நடத்துகிறார் எனப் பெருமையாகத் தெரிவித்தார்
எம்டெக் மின்னணு பொறியியல் படிக்கும் ரேவதி கூறுகையில், ஹசன் அலி என்னுடைய பாடங்களை எளிதாகக் கற்றுத்தருகிறார். அவர் கற்றுத் தருவது நன்றாகப் புரிகிறது. சிறிய வயதில் அதிகமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT