Published : 21 Nov 2018 02:55 PM
Last Updated : 21 Nov 2018 02:55 PM
மாப்பிள்ளை இல்லாத திருமண ஊர்வலம் போல் காங்கிரஸின் நிலை உள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "காங்கிரஸ் கட்சி மாப்பிள்ளை இல்லாத மண ஊர்வலம் போல் இருக்கிறது. பாஜக தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளர் யார்? மாநிலத் தேர்தல் என்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்லிவிடுகிறது.
ஆனால், அந்தத் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா? காங்கிரஸுக்கு தலைமையும் இல்லை, தலைமைப் பொறுப்பிலிருந்து உத்தரவிடும் திராணியும் இல்லை.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவால் நாட்டுக்கு ஏற்கெனவே நல்ல நாள் வந்துவிட்டது. ஆனால், அதைப் பாராட்டத் தவறுபவர்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது.
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2033-க்குள் இந்தியா உலகின் மூன்று பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக உருவாகும்.
காங்கிரஸ் கட்சி தேசத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வைத்திருந்தது. நாங்கள்தான் அதைப் பொருளாதாரத்துக்கு அபார ஊட்டம் கொடுத்திருக்கிறோம்.
அதேபோல், அரசியல் கட்சிகள் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்ததே காங்கிரஸ்தான். அவர்கள் இதற்கு முன் அளித்த வாக்குறுதிகளை சொற்பமான அளவுகூட நிறைவேற்றியதில்லை.
காங்கிரஸின் வாக்குறுதிகள் எல்லாமே பின் தேதியிடப்பட்ட செக் போன்றவை. தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் எந்தப் புதுமையும் செய்யவில்லை. ஏற்கெனவே சொல்லி, செய்யாத விஷயங்களையே மீண்டும் பட்டியலிட்டுள்ளது" என ராஜ்நாத் சிங் பேசினார்.
ராமர் கோயில் கட்டுவது தொடர்பான கேள்விக்கு, ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். ஆனால், அது ஒரு சாதகமான சூழலில் உருவாக வேண்டும் என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT