Last Updated : 12 Nov, 2018 09:26 AM

 

Published : 12 Nov 2018 09:26 AM
Last Updated : 12 Nov 2018 09:26 AM

48 மாத சாதனைகளை விளக்கும் தகவல்களுடன் மத்திய அரசின் வசீகர இணையதளம்: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சவால்விடும் வடிவமைப்பு

மத்திய, மாநில அரசுகள், அரசுத் துறைகள், அமைச்சகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள்... இப்படி பலவற்றின் இணையதளங்களை நாம் பார்த்திருக்கலாம். பெரும்பாலும், நாம் தேடி வந்தவிஷயம் கிடைக்காது. அல்லது, ‘வேற வீட்டப் பாரு’ என்பதுபோல ‘404 எர்ரர் மெசேஜ்’ வரும். இல்லாவிட்டால், ‘டேக்டைவர்ஷன்’ போர்டு மாட்டாத குறையாக,மாறி மாறி அலையவைக்கும். ஆனால்,கார்ப்பரேட் கம்பெனிகளின் இணையதளங்களுக்கே சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட, மத்திய அரசின் https://48months.mygov.in இணையதளம்.

மத்தியில் மோடி அரசு பதவியேற்ற 2 மாதங்களில், அதாவது 2014 ஜூலையில் mygov.in இணையதளம் அறிமுகம்செய்யப்பட்டது. மற்ற அரசு இணையதளங்கள் போல அல்லாமல், மக்களின் கருத்துகளை அறிந்துகொள்வது, பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது இதன் சிறப்பம்சம்.

மண்வளம் பாதுகாப்பு போஸ்டர் உருவாக்குவது, ‘ஸ்வச் பாரத்’ ஸ்லோகன் உருவாக்குவது என்பதுபோல இதுவரை 789 போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் 2.23 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர். ‘மன் கீ பாத்’தில் இந்த வாரம் பிரதமர் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களது இந்த ஆண்டு தீபாவளி மகிழ்ச்சியாக கழிந்ததில் எந்தெந்த கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு பங்கு இருப்பதாக கருதுகிறீர்கள்? என்பதுபோல 787 குழு விவாதங்கள் நடத்தப்பட்டு, 39 லட்சம் பேர் அதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த இணையதளத்தில் தொடர்ந்துபல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன, புதிய வசதிகள், செயலிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, மோடி அரசின் 4-வது ஆண்டுநிறைவை முன்னிட்டு, ‘48 மாதங்களில் இந்தியாவின் மாற்றம்’ (48 Months of Transforming India) என்ற ‘டேஷ்போர்டு’ சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. கார்ப்பரேட் கம்பெனிகளின் இணையதளங்களுக்கே சவால் விடுகிறதுஇதன் வசீகர வடிவமைப்பு.

‘சாஃப் நியத்.. சஹீ விகாஸ்’ (தெளிவானநோக்கம்... சரியான வளர்ச்சி) என்ற வரிகள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. பின்னணியில், பிரதமர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் காட்சிப் படங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

சற்று கீழே இறங்கினால், மோடி அரசின் முக்கிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் பற்றிய புள்ளிவிவரங்கள்.

அக்டோபர் வரையிலான ஜிஎஸ்டி வரி வசூல் 14 லட்சத்து 19 ஆயிரத்து 329கோடி ரூபாய், பிரதான் மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை 32 கோடியே 99 லட்சம், தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் வரப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 69 ஆயிரம், நாட்டில் மின்வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை ‘0’... இப்படி ‘ரமணா’ ஸ்டைலில் ஏகப்பட்டபுள்ளிவிவரங்கள். ஆனாலும், கண்ணை உறுத்தாத வடிவமைப்பு. பக்கத்தை திறந்ததுமே, ராக்கெட்டுக்கான கவுன்ட்-டவுன் போல அந்த எண்கள் சுழல ஆரம்பித்து, ‘அப்டேட்’டில் வந்து நிற்கிறது.

‘டேஷ்போர்டு’ பக்கத்தில் இன்னொரு முத்தாய்ப்பு ‘48’ என்ற டிசைன். 48 என்ற எண்ணைப் பலவாறாக பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் ‘மகளிர் மேம்பாடு’, ‘ஊழல் ஒழிப்பு’, ‘சுகாதார வளர்ச்சி’, ‘அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு’, ‘இளைஞர் நலன்’, ‘சமூக நீதி’ ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதை கிளிக் செய்து, முழு விவரங்களை அறியலாம்.

அப்புறம், ‘இன்ஃபோகிராஃபிக்ஸ்’ என ஒரு பகுதி. பல்வேறு துறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஏராளமான வரைபடங்கள். பிடித்தவற்றை எளிதாக பதிவிறக்கம் செய்வதோடு, முகநூல், ட்விட்டரில் மற்றவர்களுக்கு எளிதாக அனுப்பவும் முடியும்.

‘வாய்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பகுதியில், மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்றவர்களின் பல்வேறு மொழி வீடியோ பதிவுகள். 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகளின் படத்தொகுப்பும் உள்ளது.

இதுதவிர, துறைவாரியாக அமைச்சர்கள் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள், அவர்களது வீடியோ உரைகள், பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்ற சிறு நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், படங்கள், அரசு விளம்பரங்கள், வீடியோ காட்சிகள் தனி.

மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தகவலியல் மையம் (NIC) கணினி வடிவமைப்பில், கைதேர்ந்த நிபுணர்களின் உதவியுடன்இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளது. ஓரளவு கணினி, இணையதளம்பயன்படுத்த தெரிந்தவர்கள்கூட சிரமமின்றி உலா வருவதற்கேற்ப எளிதாக, ரசனையாக, வண்ணமயமான படங்களோடு, அதுவும் அரசாங்கத்தின் இணையதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த இணையதளத்தில் பதிவுசெய்து, பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 69 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருப்பதே சாட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x