Last Updated : 25 Nov, 2018 11:35 AM

 

Published : 25 Nov 2018 11:35 AM
Last Updated : 25 Nov 2018 11:35 AM

27 நாட்களுக்குப் பின் மீட்பு: இந்தோனேசிய விமான விபத்தில் இந்திய விமானியின் உடல் கண்டுபிடிப்பு; அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன் விமானத்தை இயக்கிய இந்திய பைலட் பாவ்யா சுனேஜாவின் உடல் அடையாளம்காணப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த அக்டோபர் 29-ம் தேதி காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்திய கேப்டனும், டெல்லியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா ஆவார்.

விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த தேடுதலில் விமானத்தை இயக்கிய இந்திய கேப்டன் பாவ்யே சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கடலில் விழுந்துவிபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய இந்திய விமான பாவ்யா சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் சுனேஜாவின் உடல், அவரின் குடும்பத்தாரிடம் இந்திய தூதரகம் மூலம் ஒப்படைக்கப்படும். சுனேஜாவின் குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த வருத்தங்கள்” எனத் தெரிவித்தார்.

டெல்லியைச் சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா பைலட் பயிற்சியை முடித்து, எமிரேட்ஸ் விமானத்தில் பயிற்சி பைலட்டாகப் பணியாற்றியவர். அதன்பின் கடந்த 2009-ம் ஆண்டு பெல் ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றுள்ளார்.

 

லயன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு சுனேஜா பணிக்கு சேர்ந்துள்ளார். ஏறக்குறைய 6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர், துணை விமானி 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிவையில் “விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் விமானத்தில் வேகம் காட்டும் கருவியில் கோளாறு ஏற்பட்டதாகவும், விமானி மற்றும் துணை விமானிக்கும் வேகம் காட்டும் கருவி வெவ்வேறு அளவுகளைக் காட்டியுள்ளதாகவும்.

இதுவே விமான விபத்துக்கு வழி வகுத்ததாகவும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக இந்தோனேசிய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x