Published : 21 Nov 2018 09:03 AM
Last Updated : 21 Nov 2018 09:03 AM
மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து நிலக்கல், பம்பை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கேரளஅரசை கடுமையாகச் சாடியவர், இதேநிலை தொடர்ந்தால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பத்து வயதுக்கு கீழும், 50 வயது தாண்டிய பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் சபரிமலைக்கு இளவயது பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐப்பசி மாதபூஜை, அதன் பின்னர்வந்த சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை ஆகியவற்றுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டபோது இவ்விவகாரம் பெரிதாக வெடித்தது. சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகை யாளர்கள், பெண் செயற்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.
பிரச்சினையை சமாளிக்க 144 தடைஉத்தரவு போடப்பட்டதோடு, ஏராளமான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் 2 மாதகால மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த 16ம்தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது முறையாக இப்போதும் 144 தடைஉத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வுசெய்ய நிலக்கல், பம்பை பகுதிகளுக்கு சென்றார்.
திங்கள் கிழமை ஆய்வு செய்யச்சென்ற அல்போன்ஸ் கண்ணன்தானம் அதற்கு முந்தைய நாளே, பம்பை பகுதிக்கு ஆய்வு செய்ய வருவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் சபரிமலை செல்லும் பகுதிகளில் புனரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரிப்பேன். காவல்துறையினர் கூடுதல் பக்தர்கள் வர விடாமல் தடுக்கும் பணியை செய்கின்றனர். இதுவரை கண்டிராத துக்ளக் சட்டங்களை அமல்படுத்துகின்றனர்” என்று பதிவிட்டிருந்தார். இதை 2000 பேர் பகிரவும் செய்திருந்தனர்.
இதன் பின்னர் ஆய்வுக்கு சென்ற அல்போன்ஸ் கண்ணன்தானம் நிலக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,’’ஐயப்பனை பார்க்க வழக்கம்போல் நிம்மதியாக வரும் தோற்றம் இல்லை. மாநில அரசு ஐயப்ப பக்தர்களுக்கான உரியவசதியை செய்யவில்லை. இருமாதங்களுக்கு முன்னர் நான் இங்குவந்த போது, இருந்த நிலைதான் இப்போதும் இருக்கிறது. சுகாதாரரீதியான குழப்பங்கள் வரும் சூழல் இருக்கிறது. திறந்தவெளி கழிப்பிடமான சூழல் பல இடங்களில் இருக்கிறது. இப்படியான சூழலில் வயோதிக பெண்கள் எப்படி இயற்கை உபாதைகளை கழிப்பார்கள்?
அரசின் பார்வையே இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை கைது செய்வது ஏன்? நான் கேட்கும் கேள்விகளுக்கு தேவசம் போர்டிடம் உரிய பதில் இல்லை. சரணகோஷம் எழுப்புவது தவறா? சோவியத் நாட்டை ஆண்ட ஸ்டாலின் காலத்தில் கூட இப்படி நிலை இல்லை. நானும் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளேன். சட்டம் தெரியும். 144 தடை உத்தரவை சபரிமலைக்கு எப்படி போட முடியும்? சபரிமலைக்கு புனித யாத்திரை வருபவர்கள் கூட்டமாகத்தான் செல்ல முடியும். ஒவ்வொருவராக போக முடியாது”என்றார்.
தொடர்ந்து பம்பைக்கு சென்றவர், அங்கு சில கழிப்பிடங்கள் கயிறால் கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதைக் கண்டித்தவர், அனைத்தையும் திறக்கச் சொன்னார். சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவே கட்டி வைத்திருந்ததாக அதிகாரி ஒருவர் சொன்னார். அப்போது அவரிடம், நான் இருமாதங்களுக்கு முன்பு வந்தபோதும் நீங்கள் தானே இருந்தீர்கள்? உங்கள் கண்காணிப்பாளர் எங்கே எனக்கேட்க, அவர் சாப்பிட போயிருப்பதாகச் சொன்னார். ஆனால் மொத்தமுள்ள 270ல் பல கழிப்பிடங்கள் திறக்கப்படவில்லையே என அமைச்சர் மீண்டும் கேட்க, ஏலம் போகாதவை திறக்கப்படவில்லை என அதிகாரி சொன்னார். உடனே அடிப்படை வசதியான கழிப்பிடம் போவதிலும் காசுதான் தெரிகிறதா? குளிப்பதற்கு தெய்வம் தந்த நதி இருப்பதால் சிக்கல் இல்லை” என தெரிவித்தார்.
நிலக்கல், பம்பை பகுதிகளில் ஆய்வுக்கு பின்னர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நிலக்கலில் பக்தர்களை ஒருமணி நேரத்துக்கு மேல் நிறுத்தி வைக்கின்றனர். சரணகோஷம் எழுப்பிய 68 பக்தர்களை கைது செய்துள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட பகுதிகளின் புனரமைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்களாகியும் பணிகள் இன்னும் முடியவில்லை. வரும்நாள்களில் இதேபோன்ற நிலைதான் தொடர்வதாக இருந்தால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்”என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் பேட்டி
இந்த நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் சபரிமலை விவகாரத்தை முன்வைத்து விரிவான பேட்டி அளித்தார். அதில் அடிப்படை வசதிகள் குறித்து அவர் கூறும்போது,’’வெள்ளப் பாதிப்புக்கு பின்னர் சபரிமலை தொடர்பாக 6 கூட்டங்கள் நடத்தியுள்ளோம். சபரிமலை சாலை பலத்த சேதம் அடைந்திருந்தது. ரூ.25 கோடி செலவில் புனரமப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் ரூ. 202 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைவான நேரத்தில் பல தற்காலிக கழிப்பிடங்களை உருவாக்கியுள்ளோம். மனிதனால் செய்யக்கூடிய வேலைகளை செய்துள்ளோம். சில குறைகள் வெள்ளம் வந்ததனால் இருக்கும். அந்த பணிகளையும் தொடர்ந்து செய்துதான் வருகிறோம்”என்றார்.
அல்போன்ஸ் கடந்துவந்த பாதை!
கேரளமாநிலம், கோட்டயம் மாவட்டம் மணிமாலா பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானம் சட்டம் படித்தவர். 1979ல் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற இவர், 1981ல் தேவிகுளம் சார் ஆட்சியராக பணியைத் துவங்கினார். 1988 முதல் 91வரை கோட்டயம் மாவட்ட ஆட்சியராகவும் இருந்தார். தொடர்ந்து கேரள மாநிலப்பணியில் இருந்தவர் கடந்த 2006ம் ஆண்டு பணியை ராஜினாமா செய்தார். காஞ்சிராப்பள்ளி தொகுதியில் இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளராக வென்றார். 2011ல் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அல்போன்ஸ் கண்ணன்தானம் ராஜஸ்தானில் ஏற்பட்ட காலிஇடத்துக்கு ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டு மத்திய இணைஅமைச்சராக(தனி பொறுப்பு) பொறுப்பேற்றார்.
2006 தேர்தலில் இடதுசாரிகளின் ஆதரவால் அரசியல் அரங்கில் எம்.எல்.ஏ ஆன, அல்போன்ஸ் கண்ணன்தானம் பாஜகவில் இணைந்து இப்போது இடதுசாரிகளுக்கு எதிரான அரசியலை செய்வது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவரான அல்போன்ஸ் சபரிமலைக்காக பேசுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT