Published : 28 Nov 2018 08:12 AM
Last Updated : 28 Nov 2018 08:12 AM
மத்தியப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இன்று காலை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு மட்டும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மாலை 4மணிக்கு வாக்குப்பதிவு முடிந்துவிடும். மற்ற 227 தொகுதிகளுக்குக் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மத்தியப் பிரதேச தேர்தல் களத்தில் மொத்தம் 2,907 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் பாஜக சார்பில் 230 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி 229 வேட்பாளர்களும், ஜதாரா தொகுதியை சரத் யாதவின் எல்ஜேடி கட்சிக்கும் விட்டுக்கொடுத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 227 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் 1,102 பேர் களத்தில் உள்ளனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 165 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 58 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வென்றனர். இந்த முறை ஏராளமான மாற்றங்கள் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏறக்குறைய 65 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்படாத வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மட்டுமே நிர்வகிக்கக் கூடிய வகையில் 500 பிங்க் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் மொத்தம் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 7.70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்காங்கிரஸ் கட்சி தனது சார்பில் 40 வேட்பாளர்களையும், பாஜக 39 தொகுதிகளிலும், என்என்எப் தொகுதி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முதல்வர் லால் செர்சிப், சாம்பாய் சவுத் ஆகிய ஒரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
வரும் டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT