Published : 15 Nov 2018 12:40 PM
Last Updated : 15 Nov 2018 12:40 PM
புதுடெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து, ராமர் கடவுளோடு தொடர்புடைய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில் ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் நேற்று புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கையில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் இப்பயணத்தின் கால அளவு மொத்தம் 16 நாட்கள். தங்கும் வசதிகளைக் கொண்ட ரயிலில் ஆர்வமுள்ள பயணிகள் காணப்பட்டனர். 16 நாள் நீண்ட பயணம் மேற்கொள்ளும் அவர்களை ரயில்வே பணியாளர்கள் வரவேற்றனர்.
இப்புனிதப் பயணம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் தனித்தனியே இந்தியா மற்றும் இலங்கையில் பயணங்களை மேற்கொள்ளும். டெல்லியை விட்டு புறப்பட்ட உடன் முதல் இடமாக அயோத்திக்குச் செல்லும். அங்கு ஹனுமன் கார்கி ராம்கோட் மற்றும் கானக் பவான் கோயில் ஆகிய இடங்களைக் காணலாம்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பயணத்தில் ராமாயணம் சார்ந்த நந்திகிராம், சீதாமார்ஹி, ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், ஷிரிங்வெர்பூர், சித்ராகூட், நாஸிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்கள் முக்கியமாக இடம்பெறும்.
இப்புனிதச் சுற்றுலாவில் அனைத்து வகையான உணவுகள், துணிகளை துவைத்துக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வசதியாக ஆங்காங்கே உள்ள யாத்ரீகர்களுக்கான சத்திரங்களில் தங்கிச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான இடமாற்றங்கள், புனிதத் தலங்களைப் பார்வையிடுவதற்கான வசதிகளை ஆர்சிடிசியின் சுற்றுலா மேலாளர் உடனிருந்து ஏற்பாடுகள் செய்வார்.இச்சுற்றுலாவில் அனைத்து இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுடன் அவரும் பயணம் செய்கிறார்.
ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் 800 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.15,120.
இலங்கைக்கு ராமாயணச் சுற்றுலா
இச்சுற்றுலாவின் அடுத்த பகுதி இலங்கை ஆகும். இதற்கு கட்டணம் தனியே செலுத்த பதிவு செய்துகொள்ளவேண்டும். ராமாயண யாத்திரையின் நிறைவுப் பகுதியாக அமையும். இதில் சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து இலங்கையில் உள்ள ராமாயணம் தொடர்பான இடங்களைப் பார்வையிட வேண்டும்.
இலங்கைப் பயணம் 5 இரவுகள்/6 பகல்களைக் கொண்டது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.36,970. இப்பயணத்தில் கண்டி, நுவரயேலியா, கொழும்பு மற்றும் நெகோம்போ ஆகிய இடங்கள் ராமாயண சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கான முக்கிய இடங்களாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT