Last Updated : 07 Nov, 2018 01:24 PM

 

Published : 07 Nov 2018 01:24 PM
Last Updated : 07 Nov 2018 01:24 PM

உர்ஜித் படேல் ராஜினாமா?- ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மோதல் முற்றுகிறது; என்ன காரணம்?

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக இருந்துவந்த மோதல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது.ரிசர்வ் வங்கிக்கு கடும் நெருக்கடியை மத்திய அரசு அளித்துவருவதால், வரும் 19-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்து அறிவிப்பார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான உறவு இருந்தாலும், அவ்வப்போது உரசல்கள் எழுவது வழக்கமாக இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக சுப்பா ராவ் இருந்த காலத்தில் இது தீவிரமானது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது, உரசல்கள் இருந்தாலும் அது பெரும்பாலும் வெளியே தெரியாமல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேசும் போது, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை முழுமையாக மத்திய அரசு மதிக்க வேண்டும். பல்வேறு அழுத்தங்களை அளிக்கிறது என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

என்ன காரணம்?

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக அரசு வெற்றி பெறும் முனைப்புடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் திட்டங்களை அறிவித்து வருகிறது.

இதன்காரணமாக வங்கிகள் கடன் வழங்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கோரி வருகிறது. ஆனால், நாட்டின் நிதிச்சூழல், பணவீக்கம், வாராக்கடன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் வழங்குவதில் பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடைப்பிடித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த கிடுக்கிப்பிடி மத்திய அரசுக்குத் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்க உள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உபரியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தருமாறு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பணத்தின் மூலம் தங்களின் நிதிப்பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது.

இதனால், மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கிக்கு அறிவுரைகள் வழங்க அமைக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் குழு மூலம் நெருக்கடிகளை மத்திய அரசு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அளித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

நெருக்கடி

இது குறித்து ரிசர்வ் வங்கி வாரிய இயக்குநர் குழுவில் உள்ள ஒரு அதிகாரி கூறுகையில், பொருளாதாரத்துக்கு முன்னுரிமை தரக்கூடிய விஷயங்களை ரிசர்வ் வங்கி கவர்னர் ஏற்க வேண்டும். வாரிய உறுப்பினர்களுடன் ஆலோசிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டால், அவர் பதவியில் இருந்து விலகிவிடுவது சரியானது எனத் தெரிவித்தார்.

இதனால், வரும் 19-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று ராய்டர்ஸ் நிறுவனம் மணிலைப் என்ற ஆன்லைன் தளத்தை சுட்டிக்காட்டித் தெரிவிக்கிறது.

ஏற்கனவே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஊசலாட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், ஒருவேளை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தால், அது பங்குசந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நிதி அமைச்சகம் மறுத்துவிட்டது.

19-ம் தேதி கூட்டத்தில் முடிவு

இது குறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ரிசர்வ் வங்கிக்கு உதவ மத்திய அரசால் அமைக்கப்பட்ட வாரியக் குழுவின் பணி என்பது, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை கண்காணிப்பது மட்டுமே, அதாவது, பணியிடங்கள், மற்றும் உள்நிர்வாக தணிக்கை செய்வது மட்டுமே. அதற்காக இந்த வாரியக்குழுவுக்கு கட்டுப்பட்டு அதன் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை சுயாட்சியை முடக்கும் வகையில் எப்போதும் இல்லாத வகையில் ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு7-ஐ மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது. ஒருவேளை ரிசர்வ் வங்கியை அடக்கும் வகையில் வாரியக்குழுவினர் செயல்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. இதுபோன்ற சூழல் இதற்கு முன் எழுந்ததில்லை எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x