Published : 02 Nov 2018 08:35 AM
Last Updated : 02 Nov 2018 08:35 AM
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 5-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில், ‘சபரிமலை, ஐயப்பனின் மரபுகளை அவமதிப்பவர்கள் ஓட்டு கேட்டோ, நன்கொடை கேட்டோ வீட்டுக்குள் வராதீர்கள்’ என இந்து அமைப்பினரும் பெண்களும் தங்கள் வீடுகளில் போஸ்டர் ஒட்டத் துவங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதை நடைமுறைப்படுத்துவதில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிய நிலையில், ஐயப்ப பக்தர்கள், பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்தன. பெண் பக்தர்களும் வீதிக்கு வந்துபோராடினர்.
மாதாந்திர பூஜைக்காக கடந்த மாதம் 17-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர். ‘கோயில் நடையை சாத்துவேன்’ என தந்திரியே அறிவிக்கும் அளவுக்கு பிரச்சினை வெடித்தது. 22-ம் தேதி ஜப்பசி மாத பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது வரை தொடர்ந்து பதற்றம் நிலவியது.
இந்நிலையில் தற்போது, ‘சபரிமலை, ஐயப்பன் மற்றும் அதன் மரபுகளை அவமதிப்பவர்கள் ஓட்டு கேட்டோ, நன்கொடை கேட்டோ இந்த வீட்டுக்குள் வராதீர்கள்’ என பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஐயப்ப பக்தர்கள் சிலர் தங்கள் வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதேபோன்ற போஸ்டர்களை தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். இது அதிகமானவர்களால் பகிரப்பட்டும் வருகிறது.
ஏற்கெனவே, ‘ஐயப்பனைத் தரிசிக்க காத்திருக்கத் தயார்’ என்னும் கோஷத்தோடு ரெடி டூ வெயிட் அமைப்பு, பாஜகவின் மகளிர் அமைப்பு என பலரும் போராடி வரும் நிலையில், இப்போது போஸ்டர் யுத்தம் துவங்கியுள்ளது.
ஆனால் கேரளாவில் வீடுகளில்அரசியல், சமூக பிரச்சினைகளைச்சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டப்படுவது இது முதல்முறை அல்ல.
பதிலுக்கு பதில்
ஐம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையும் செய்யப்பட்டாள். அப்போது, கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் பாஜகவுக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டி இருந்தனர். அதில், ‘பிஜேபி மெம்பர்ஸ் ஈ வீட்டில் பிரவேசனம் இல்லா. ஈ வீட்டில் குஞ்நு மக்களுண்டு’ என வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, ‘வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பாஜகவினர் ஓட்டுக்கேட்டு வராதீர்கள்’ என்பதே இதன் தமிழ் அர்த்தம். இந்த ரக போஸ்டர்கள் அப்போது கேரளாவில் வைரலானது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சபரிமலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் இப்போது போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், வரும் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில்நடை திறக்கப்பட உள்ளது. 6-ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT