Published : 10 Nov 2018 05:04 PM
Last Updated : 10 Nov 2018 05:04 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முகலாய மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்ட நகரத்தின் பெயர்களை மாற்றும் முன், பாஜக தனது கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என்றும் பைசாபாத்தை அயோத்தி மாவட்டம் என்றும் மாற்றினார். இந்நிலையில், உ.பி. பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர், ஆதித்யநாத் நகரங்களின் பெயர் மாற்றும் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் நிருபர்களிடம் கூறியதாவது:
''பாஜக முதலில் தனது கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்களின் பெயரை மாற்றிவிட்டு, நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும். குறிப்பாகத் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, உ.பி. அமைச்சர் மோசின் ராசா ஆகியோர் பெயரை மாற்ற வேண்டும்.
முகல்சாரி மற்றும் பைசாபாத் பெயரை பாஜக மாற்றி இருக்கிறது. அவை எல்லாம் முகலாய மன்னர்கள் வைத்த பெயர், அதனால் மாற்றினோம் என்று கூறுகிறார்கள்.
நம்மால் ஜிடி சாலையைத் தூக்கி வீசவிட முடியுமா?, டெல்லி செங்கோட்டையை யார் எழுப்பியது, தாஜ்மஹாலை யார் கட்டியது இவை அனைத்தையும் ஒதுக்கிவிட முடியுமா.
நகரங்களுக்கு பெயர் மாற்றும் செயல் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. எப்போதெல்லாம் அந்த மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு குரல் எழுப்புகிறார்களோ அப்போது இதுபோன்ற கவனத்தை திசைதிருப்பும் செயலை செய்கிறார்கள்''.
இவ்வாறு ராஜ்பர் தெரிவித்தார்.
இதற்கிடையே உ.பி. பாஜக தலைவர் சங்கீத் சோம் கூறுகையில், ''உ.பி.யில் உள்ள முசாபர் நகரின் பெயரை லட்சுமி நகர் என்று மாற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். முகலாயர்கள் ஆண்டபோது, லட்சுமி நகரை முசாபர் அலி என்று மாற்றிவிட்டார்கள். இந்தப் பெயரை மாற்ற வேண்டும்'' என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT