Last Updated : 13 Nov, 2018 12:04 PM

 

Published : 13 Nov 2018 12:04 PM
Last Updated : 13 Nov 2018 12:04 PM

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- நவ.19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா பானர்ஜி சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வரும் 19-ம் தேதி மேற்கு வங்கத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக இது பார்க்கப்படுகிறது.

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

 

பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் சந்திரபாபு நாயுடு.

 

அதேபோல டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிய  நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் வரும் 19-ம் தேதி சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேச உள்ளார்.

 

முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ''2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லி செங்கோட்டையில் பாஜகவினர் யாரும் தேசியக் கொடியை ஏற்றவிடக்கூடாது. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கமில்லை, இலக்கும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜகவை வெளியேற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

 

இதற்காக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பேரணியை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவோம்'' என்று தெரிவித்திருந்தார்.

 

வரும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க சந்திரபாபு நாயுடு முயன்று வரும் நிலையில், சந்திரபாபு - மம்தா சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x