Published : 07 Nov 2018 07:57 PM
Last Updated : 07 Nov 2018 07:57 PM
தீபாவளியையொட்டி சென்னையில் மாலை 4 மணிக்குப் பதிவான குறைவான காற்று மாசு, அதற்குப் பின் அதிகரித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி நாளில் ஏற்பட்ட மாசுபாட்டின் அளவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தரக் கட்டுப்பாட்டைவிட ஓரளவு அதிகமாக உள்ளது. குடியிருப்பு, வணிகப் பகுதிகளில் 100 மைக்ரோகிராம்களுக்கு அதிகமாக மாசுத் துகள்கள் காற்றில் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்தது.
பொதுவான நாட்களில் காற்றில் இருக்கும் மாசை விட, தீபாவளியன்று அதிகப் பட்டாசுப் புகை காரணமாக ஏற்படும் காற்று மாசு அபாய அளவை எட்டும். அதை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதன்படி வாரியம் சார்பில் நேற்று (06.11.18) மாலை 4 மணியளவில் வெளியான அறிக்கையில் காற்று மாசுத் துகள்களின் அளவு குறைந்து 89 ஆக இருந்தது. இதற்கு இரண்டு மணி நேரமே வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகக் கூறப்பட்டது.
ஆனால் 4 மணிக்குப் பிறகு மாலை மற்றும் இரவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், காற்றில் கலந்திருந்த மாசுத் துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி இதன் அளவு 121 ஆக உயர்ந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் கர்நாடகாவில் உள்ள சிக்கபல்லாபூர் என்னும் மாவட்டத்தில் மட்டுமே மிகவும் குறைவான அளவில் (50) காற்று மாசு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் வட இந்திய நகரங்களான லக்னோ (309), முஸாபர் நகர் (382), மொரதாபாத் (375), கொல்கத்தா (326), பாட்னா (373) ஆகியவற்றில் காற்று மாசுபாடு மிகவும் மோசமாக, அபாயகரமான சூழலை எட்டியதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் நாட்பட்ட அளவில் சுவாச நோய்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT