Published : 31 Oct 2018 08:26 AM
Last Updated : 31 Oct 2018 08:26 AM
தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பதவிக் காலத்துக்கு 9 மாதங் களுக்கு முன்பே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரானார் அம்மாநில முதல்வரும் டிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ். மேலும், ஆரம்பத்திலேயே இவர் 195 தொகுதி களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார்.
மற்ற கட்சிகளான காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சிகள் இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. பாஜகவும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. எனவே, டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்கள் இவர்களை முந்திக் கொண்டு வாக்காளர்களைக் கவரும் விதத்தில் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில், முன்னாள் சபாநாயகரான மதுசூதனாச்சாரி, ஒருபடி மேலே சென்று, வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றார்.
இவர் போட்டியிடும் பூபாளபள்ளி யில் இரவு, பகலாக வாக்கு சேகரித்து வருகிறார். இவர், வீடுகளுக்கே சென்று வாக்காளர்களுக்கு சாப்பாடு ஊட்டியும், முடி திருத்தும் கடைக்கு சென்று, முகச்சவரம் செய்தும் நூதன முறையில் வாக்கு சேகரிக்கிறார். யாராவது இவரது தொகுதியில் மரணமடைந்தால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று, இறுதி சடங்குவரை இருந்து அனைவரையும் துக்கம் விசாரித்து விட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கிறார்.
இதுபோல, மெட்சல் மாவட்டம், குத்புல்லாப்பூர் டிஆர்எஸ் வேட்பாள ரான விவேகானந்தா, நேற்று அவர் போட்டியிடும் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றார். திண்டுகல், நாகலூரு, தாண்டா பகுதிகளுக்கு சென்றார். அப்போது, இவர் ஒரு குழந்தையை குளிப்பாட்டி வாக்கு சேகரித்தார். இவர்களைப் போன்று தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சியின் பல வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT