Published : 09 Jan 2014 07:20 AM
Last Updated : 09 Jan 2014 07:20 AM
நாட்டின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே, அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
புது டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற 12-வது ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
“கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை சராசரியாக 7.9 சதவீதமாக உள்ளது.
சமீப காலமாக சிறிது பொருளாதார பின்னடைவைச் சந்தித்து வருகிறோம். எனினும், இந்த நிதியாண்டில் நமது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நமது பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் வலுவாக உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேமிப்பு மற்றும் முதலீடுகள் மட்டுமே 30 சதவீதம் என்ற அளவில் உள்ளன.
நாட்டின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்துள்ளது.
இன்றைய நிலையை பார்த்து அவநம்பிக்கை அடைய வேண்டாம்; எதிர்காலத்தை நினைத்து பயப்படவும் வேண்டாம். எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள் வோம். நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
நிர்வாகத்தை பலப்படுத்தும் நடைமுறைகளை முழுவதுமாக மேற்கொண்டு விட்டோம் என கூற முடியாது. அதேசமயம், சரியான திசையில் செயல்பட்டு வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா, இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தல், சட்ட அமலாக்கத் துறை மற்றும் தணிக்கைத் துறைக்கு அதிக அதிகாரம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.வரும் மக்களவைத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருந்தாலும், இந்தியாவின் ஜனநாயக வலிமையை மற்றொரு முறை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த தேர்தல் இருக்கும்.
தங்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் குறித்து இளைஞர்கள் தெளிவாக சிந்திக்கின்றனர். அதோடு அரசியலிலும் அவர்கள் தீவிரமாக பங்கெடுத்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள், ஜனநாயகத்தை ஆக்கப்பூர்வமாக கட்டமைக்க உதவும். நாட்டில் நிலவும் ஜனநாயகப் பன்முகத்தன்மைக்கு எதிர்காலத் தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
சமீபகாலமாக மத்திய அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருந்தால் மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். குறிப்பாக நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும்.
எனினும், ஏற்கெனவே நாம் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள், வெளிநாடுகளி லிருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதை இன்னும் சில மாதங்களில் கண்கூடாக நீங்கள் பார்ப்பீர்கள்.
தொலைத்தொடர்புத் துறை யில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து கிராமங்களும் பிராட்பேண்ட் சேவையால் இணைக்கப்பட்டு விடும்
சூரிய மின் சக்தி, காற்றாலை, அணு மின் சக்தி மூலமான மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விடுவோம்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இந்த கொள்கையை செயல்படுத்துவதன் மூலம்தான் நீடித்த பொருளாதார வளர்ச்சியையும், சமூகத்தில் சமநிலையையும் ஏற்படுத்த முடியும்” என்றார் மன்மோகன் சிங்.விழாவில், ‘தாய்நாட்டில் உள்ள வியத்தகு வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான நூலை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT