Last Updated : 01 Oct, 2018 03:51 PM

 

Published : 01 Oct 2018 03:51 PM
Last Updated : 01 Oct 2018 03:51 PM

‘பாகிஸ்தானை 4 பகுதிகளாக உடைக்கத் தயாராக இருக்க வேண்டும்’; இம்ரான் கானை ‘பியூன்’ என்று வர்ணித்த சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பியூன் வேலை செய்துவருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிமணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

நியூயார்க் நகரில் ஐ.நா.சபை பொதுக்கூட்டம் நடந்துவருகிறது. இதில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பேசி வருகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெஷாவரில் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளித்தது என்று குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தும் இந்தியா நிராகரிக்கிறது என்றும் புகார் கூறினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் ஈனம் கம்பீர் ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்நிலையில் அகர்த்தலாவில் சமஸ்கிருத கவுரவ் சனஸ்தான் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று வந்திருந்தார். ,அப்போது, சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் ஒன்றுமில்லை, பாகிஸ்தானின் ராணுவம், தீவிரவாதிகளால் நடத்தப்படும் ஐஎஸ்ஐ அமைப்பின் எடுபிடி(பியூன்) வேலை செய்பவர். அவரை பொதுவாக அனைவரும் பிரதமர் என்கிறார்கள், உண்மையில் இம்ரான் கான் செய்துவருவது பியூன் பணிதான்.

பாகிஸ்தானுக்கு ஒரேஒரு தீர்வுதான் இருக்கிறது. பாகிஸ்தானின் பகுதியாக இருக்க பலுசிஸ்தான் விரும்பவில்லை, சிந்தி மக்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்திருக்க விருப்பமில்லை, அதேபோல பஸ்துன்களும் எதிர்க்கிறார்கள். ஆதலால் பாகிஸ்தானை 4 பிரிவுகளாகப் பிரித்து, அதில் 3 பிரிவுகளை பலூச், சிந்தி, பஸ்துன்களுக்கு பிரித்துகொடுத்து மேற்கு பஞ்சாயை மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

ஐ.நா.சபையில் பாகிஸ்தானைப் பற்றிப் பேசி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய நேரத்தை வீணாக்கக்கூடாது. ஏனென்றால் இந்தியாவைச் சீண்டும் போது, பாகிஸ்தான் மனரீதியாக மகிழ்ச்சி கொள்கிறது. பாகிஸ்தான் பற்றி கண்டுகொள்ளாதீர்கள். நம்முடைய ராணுவத்தை எந்தநேரமும் தயாராக வைத்திருந்து பாகிஸ்தானை 4 பகுதிகளாக உடைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். ஆனால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அங்குள்ள இந்து கோயில்களை இடிக்காமல் தடுத்து, அவ்வாறு செய்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும். இந்துக் கோயில்களை மசூதிகளாகவும், இந்துக்களை முஸ்லிம்களாகவும் மாற்றுவதையும் தடுக்க வேண்டும். வங்கதேசம் இந்துக்களைத் தொந்தரவு செய்தவதை நிறுத்தாவிட்டால், எங்கள் அரசு உங்கள் நாட்டில் தலையிட வேண்டியது இருக்கும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x