Published : 03 Oct 2018 07:58 AM
Last Updated : 03 Oct 2018 07:58 AM
சபரிமலை ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் வழங்க மாட்டோம் என பந்தளம் அரச குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனை அரண்மனை நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படு வதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலையில் அனைத்து பெண் களையும் அனுமதிக்கலாம் என அண்மையில் தீர்ப்பு கூறியது.
இந்நிலையில், பந்தளம் அரச குடும்பத்தின் அறிக்கை என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஒரு கடிதம் பரவியது. “சபரிமலை கோயிலில் பதினெட்டுபடி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையிலுள்ள ஆபரணப் பெட்டி சபரிமலை சன்னிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம். ஐயப் பனுக்குரிய ஆபரணங்கள் எங்க ளது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது” என நீள்கிறது அந்தக் கடிதம்.
இதனை பந்தளம் அரச குடும்பத்தின் சார்பில் பந்தள அரண்மனை நிர்வாகிகள் அமைப்பு தலைவர் சசிகுமார் வர்மா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இது உண்மைக்கு புறம்பான தகவல். ஐயப்பனுக்கு அணியப்படும் அணிகலன்கள், கோயிலில் நடக்கும் வழக்கமான நடைமுறைகள், பூஜைகள் போன்றவற்றை அரண்மனையால் தடைசெய்ய முடியாது. அப்படி எந்த முடிவும் நாங்கள் எடுக்கவும் இல்லை. இப்படி பொய் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பந்தளம் அரண்மனை நிர்வாகிகள் அமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் வர்மா, இந்து தமிழிடம் கூறும்போது, “ஆபரணம் கொடுக்க மறுப்பதாக யாரோ போலியாக தகவல் பரப்பியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஆபரணங்கள் எப்போதும் போல் வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பந்தளம் குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்த நிலையில் இப்படி வதந்தி பரவியது.
இன்று ஆலோசனை
இந்நிலையில் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலகத்தில் சபரிமலை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் சபரிமலை தீர்ப்பு குறித்து சீராய்வு மனுதாக்கல் செய்வது உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT