Published : 12 Oct 2018 05:21 PM
Last Updated : 12 Oct 2018 05:21 PM
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும் 50 வயதைத் தாண்டிய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதனால் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘சபரிமலை கோயிலுக்குச் செல்லும் உரிமை அனைத்து வயதுப் பெண்களுக்கும் உள்ளது’’ எனத் தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடாது என்கிற கருத்து ஒருபுறம் இருக்க, அப்படி ஏன் வரக் கூடாது? அதன் பின்னால் உள்ள ஆன்மிக ரீதியான காரணங்கள் என்ன? என்பது குறித்து சபரிமலை தந்திரிகள் தரப்பினரிடம் பேசினோம்.
சபரிமலை தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரருவின் பேரன் ராகுல் ஈஸ்வர்தான் தந்திரிகளின் குரலாக ஒலித்து வருகிறார். அவர் இதுகுறித்து 'இந்து தமழ்' இணையதளத்திடம் பேசும்போது, ‘’சபரிமலையில் கடந்த ஆண்டு மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர். அப்படியானால் இங்கு பாலினப் பாகுபாடு கிடையாது என்று தானே அர்த்தம். வயதுதான் இங்கு சிக்கல். அதற்கான காரணம் புரிந்தால் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.
ஒருவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவரை ‘பிரம்மச்சாரி’ என்று சொல்கிறோம். அதே அவர் திருமணம் செய்து கொள்ளும்போது ’குடும்பஸ்தன்’ ஆகிவிடுகிறார். அப்படியானால் இங்கு ’பிரம்மச்சாரி’ என்னும் பதம், திருமண பந்தத்தில் முற்று பெற்றுவிடும்.
ஆனால், சபரிமலை ஐயப்பன் ’நைஷ்டிக பிரம்மாச்சாரி’. அதனுடைய அர்த்தம் அவர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பார் என்பதுதான். அப்படிப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்பது காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.
இதுபோக கேரளத்தில் வேறு நான்கு ஐயப்பன் கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம் அனைத்து வயதிலும் பெண்கள் போய் வருகிறார்கள். காரணம் இங்கு மட்டும்தான் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சர்யத்தில் இருக்கிறார். அதனால் தான் ’சபரிமலை பள்ளிக்கட்டு ஐயப்பா ஜல்லிக்கட்டு’ எனப் பெயரிட்டு போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
சட்டப்படி சீராய்வு மனுவையும் தாக்கல்செய்துள்ளோம். ஒருபக்கம் சட்டரீதியான போராட்டத்தில் கவனம் செலுத்தினாலும், இன்னொரு பக்கம் தமிழகத்தின் ஜல்லிக்கட்டைப் போல் போராட உள்ளோம். அக்டோபர் 17 முதல் 22 வரை சபரிமலையில் பத்தாயிரம் பக்தர்கள் திரண்டு போராட உள்ளோம்.
நைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்பனின் கொள்கையைக் காக்கத்தான் இந்தப் போராட்டம். மீண்டும், மீண்டும் சொல்கிறோம். பெண்களை அனுமதிக்காமல் இருக்கக் காரணம் பாலினப் பாகுபாடு கிடையாது. வயது விதிமுறைகள் தான்!”என்கிறார்.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு இது குறித்துக் கூறுகையில், ‘’சபரிமலையில் வந்து போராட்டம் வென்றது என உரக்கக் கத்தினால்தான் அது பெண் சுதந்திரமா? பெண்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் வயது மட்டும்தான் இங்கு தடைக்கான காரணம். தீர்ப்புக்கு எதிராக கேரளத்தில் அனைத்து இந்து மக்களும் சாதிகளுக்கு அப்பாற்பட்டு போராடி வருகின்றனர். ராத்திரி, பகலாக வீதிக்கு வந்து போராடுகிறோம். ஏன் தெரியுமா? அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால்தான்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT