Published : 23 Oct 2018 01:00 PM
Last Updated : 23 Oct 2018 01:00 PM
புனிதமான சபரிமலையை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முயல்கிறது. பெண்களைச் செல்லவிடாமல் தடுத்து அவர்களின் உரிமையைப் பறிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது உள்ள பெண்கள் செல்ல அனுமதியில்லை எனும் பாரம்பரிய நடைமுறை நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கோயில் திறந்தபின் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவிடப்பட்டனர். இதனால், சபரிமலை கடந்த 5 நாட்களாக மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க நேற்றுவரை முயன்ற 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அனைவரும் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் பூஜைகள் முடிந்த நேற்று கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்தச் சூழலில் முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிச்சயாக அமல்படுத்துவோம் என்று நீதிமன்றத்தில் கேரள அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் கேரள அரசு செய்துவிட்டது. கேரள அரசோ அல்லது போலீஸாரோ சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை தடுக்க முயற்சிக்க முடியாது. ஆனால், பெண்கள் பக்தர்களைத் தடுத்து சபரிமலையை போர்க்களமாக ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.
போராட்டக்காரர்கள் சபரிமலைக்கு வரும் வாகனங்களைச் சோதனையிட முயற்சித்தார்கள், பெண் பக்தர்கள் மீதும், ஊடக செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். கேரள வரலாற்றிலேயே ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தும் மனநிலை முதல் முறையாக இப்போதுதான் உருவாகி இருக்கிறது.
சபரிமலையில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. சபரிமலை கோயிலை ஒருபோதும் போர்க்களமாக மாற்ற நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதி செய்கிறோம். சமீபத்தில் நடந்த சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் நான் நினைக்கவில்லை, சட்டம் ஒழுங்கு தோல்வி அடையவும் இல்லை.
சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் சபரிமலைப் பகுதியில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தனர். அவர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து பெண் பக்தர்களைத் தடுத்தனர். அவர்கள் நிச்சயம் பக்தர்கள் இல்லை, ஐயப்ப பக்தர்கள் போர்வையில் முகமூடி அணிந்தவர்கள். சபரிமலைக்கு வந்த பெண்கள் பலரை இந்த போராட்டக்காரர்கள் தாக்கித் திருப்பி அனுப்பினார்கள். ஊடகத்தில் பணியாற்றும் பெண்கள் தாக்கப்பட்டனர். கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் மீது இதற்கு முன் இப்படித் தாக்குதல் நடந்தது இல்லை.
பெண்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடந்த சதிச் செயலாகும். சபரிமலையில் ஏறத் தொடங்கியவுடன் அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பெண்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து, தாக்குதலை நடத்தியுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக மாற்ற வேண்டும் என்று சங் பரிவாரங்களின் திட்டமாகும். விரைவில் சபரிமலையில் முகாமிட்டுள்ள கிரிமினல்களையும், தாக்குதல் நடத்துபவர்களையும் அப்புறப்படுத்துவோம்''.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT