Published : 01 Oct 2018 05:27 PM
Last Updated : 01 Oct 2018 05:27 PM
போலீஸார் சுட்டதால் உயிரிழந்த ஆப்பிள் அதிகாரியின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் திவாரியின் மனைவி கல்பனா திவாரி, ''சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு யோகி ஆதித்யநாத் செவிசாய்த்திருக்கிறார். வேலை, வீடு, எனது மகள்களுக்கான படிப்புச் செலவு என எனது அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வதாக முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்.
எனக்கு மாநில அரசிடம் நம்பிக்கை இருந்தது. முதல்வரைப் பார்த்தபிறகு அந்த நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. என்னுடைய கணவர் விட்டுச்சென்ற பொறுப்புகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை யோகி ஆதித்யநாத் அளித்திருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது?
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஆப்பிள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி (வயது 38). அவர் தனது நண்பருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, செப்டம்பர் 29-ம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போலீஸார் காரை மறித்தனர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல் செல்ல முற்பட்டது. எனினும் வாகன சோதனைக்காக பைக்கில் நின்று கொண்டிருந்த 2 போலீஸாரும் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். கார் வேகமாக மோதியதில், போலீஸாரின் பைக் கீழே சரிந்தது.
இதையடுத்து விவேக் திவாரி காரை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விவேக் திவாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சற்று நேரத்துக்கு பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT