Published : 13 Oct 2018 08:04 AM
Last Updated : 13 Oct 2018 08:04 AM

தெலுங்கு தேசம் எம்.பி. வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர் ரமேஷுன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த ஒரு வாரமாக தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள், அந்த கட்சிக்கு நெருக்கமாக உள்ள தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங் களைப் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் நெல்லூரில் உள்ள ஆளும் கட்சி பிரமுகரான மஸ்தான் ராவின் அலுவலகங்கள் மற்றும் விஜயவாடா, குண்டூர் ஆகிய நகரங்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரிக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று கடப்பா மாவட்டம், எர்ரகுண்ட்லா மண்டலம், போட்ல துர்த்தி கிராமத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.எம். ரமேஷுக்கு சொந்தமான வீட்டில் சுமார் 15 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எம்.பி. வீட்டில் இல்லை. அவரது சகோதரர் சி.எம். சுரேஷ் வீட்டில் இருந்தார்.

அவரையும், அவரது வீட்டாரை யும் வருமான வரித்துறையினர் வெளியே அனுப்பி விட்டு, வீட்டை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு நேற்று இரவு வரை சோதனை நடத்தினர். இதேபோன்று, ஹைதரா பாத்தில் உள்ள ரமேஷுக்கு சொந்த மான வீடு மற்றும் நிறுவனங்களில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

எம்.பி. குற்றச்சாட்டு

இதுகுறித்து எம்.பி. ரமேஷ் டெல்லியில் நேற்று செய்தியாளர் களிடம் கூறுகையில், "ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தெலுங்கு தேச எம்பிக்கள், மத்திய அரசை எதிர்த்து வாதாடினர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னுடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த உத்தரவு போடப்பட்டுள்ளது. இது பாஜகவின் சூழ்ச்சி. வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் கிடையாது" என கூறினார்.

அமைச்சர் லோகேஷ் புகார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான லோகேஷ் கூறியதாவது:

இது பாஜகவின் அரசியல் பழிவாங்கல். கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை அமைக்கக் கோரி எம்.பி., ரமேஷ் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதற்காகத்தான் தற்போது அவர் மீது வருமான வரித்துறையினர் ஏவி விடப்பட்டுள்ளனர். மாநில பிரிவினையில் சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் மத்திய அரசு செயல்படுத்தும் வரை எங்களது போராட்டம் ஓயாது. நிச்சயமாக இது ஆபரேஷன் கருடாவின் ஒரு பாகமே. இது போன்ற வருமான வரிச் சோதனைகள் மூலம் தெலுங்கு தேசம் கட்சியை பயமுறுத்தி விடலாம் என மத்திய அரசு தவறான கணக்கை போட்டுள்ளது. இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் லோகேஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x