Published : 01 Oct 2018 03:00 PM
Last Updated : 01 Oct 2018 03:00 PM

தேர்வு எழுத வந்த இளைஞர் விபத்தில் காயம்: 10 கி.மீ. தொலைவை 7 நிமிடங்களில் கடந்து தேர்வு மையத்தில் சேர்த்த போலீஸார்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் போலீஸ் தேர்வு எழுந்த வந்த இளைஞர் விபத்தில் காயமடைந்த நிலையில், இதை அறிந்த போலீஸார் அந்த இளைஞருக்குச் சிகிச்சை அளித்து, உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் சேர்த்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.

தேர்வு தொடங்குவதற்கு 12 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் 10 கி.மீ. தொலைவை 7 நிமிடங்களில் போஸீலார் தங்களுடைய ஜீப்பில் பரபரப்பான சாலையில் கடந்து இளைஞரை உரிய இடத்தில் சேர்த்தனர்.

செகந்திராபாத்தின் லோடுகுந்தா பகுதியைச் சேர்ந்த இளைஞர் பவன் குமார். தெலங்கானா மாநிலத்தில் நேற்று போலீஸ் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு எழுதுவதற்காகப் பவன் குமார் தனது பைக்கில் அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையைக் கடந்த ஒரு முதியவர் மீது மோதாமல் தவிர்க்கும் பொருட்டு பைக்கை திருப்புகையில், பவன் குமார் கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் பவன் குமாரின் முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் நின்றிருந்த போலீஸார் பவன் குமாரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

விபத்தில் பவன் குமார் சிக்கிய செய்தியையும் அவரின் பெற்றோருக்கு போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக பவன் குமாரின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், பவன் குமார் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போலீஸ் தேர்வுக்காக படித்து தயாராகியதை தெரிவித்தனர். இப்போது தேர்வு எழுதமுடியாவிட்டால், அவனுடைய முயற்சி வீணாகிவிடும் என்பதையும் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட போலீஸ் கான்ஸ்டபிள் எஸ்.சந்திரசேகர், திரிமுல்கேரி போலீஸ் நிலையத்தின் ஹோம்கார்டு டி.ரவீந்தர் ஆகியோர் பவன் குமாரைத் தேர்வு மையத்தில் கொண்டு போய் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால், தேர்வு தொடங்குவதற்கு 12 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. உடனடியாக பவன் குமாரை தங்களின் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மேரிஸ் கல்லூரியை நோக்கிப் புறப்பட்டனர்.

லோடுகுந்தா சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். மருத்துவமனையில் இருந்து கல்லூரிக்கு 10 கி.மீ. தொலைவு இருக்கும். ஆனால், ஜீப்பை மின்னல் வேகத்தில் செலுத்தி, 10 கி.மீ. தொலைவை 7 நிமிடங்களில் போலீஸார் அடைந்தனர். தேர்வு தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே போலீஸார் பவன் குமாரை தேர்வு மையத்தில் சேர்த்து, நடந்த சம்பவங்களை தேர்வு மைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பவன் குமார் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த நிலையில் அவர் தேர்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இந்தக் காட்சியை திரிமுல்கேரி போலீஸார் வீடியோ எடுத்து, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். திரிமுல்கேரி போலீஸாரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாராட்டியுள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் ரீட்விட் செய்துள்ளனர்.

இதுகுறித்து ’தி இந்து’விடம்(ஆங்கிலம்) பவன் குமார் கூறுகையில், ’’அனைத்தும் மிகவேகமாக நடந்து முடிந்துவிட்டது. 9.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டோம், தேர்வு மையத்துக்கு 9.52 மணிக்குச் சென்று சேர்ந்தோம். தேர்வு தொடங்க இருந்த 5 நிமிடங்களுக்கு முன்பே அங்கு சேர்ந்துவிட்டோம். உண்மையில் போலீஸ் பொதுமக்களின் உற்ற நண்பன் என்பதை அறிந்து கொண்டேன்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x