Last Updated : 01 Oct, 2018 05:24 PM

 

Published : 01 Oct 2018 05:24 PM
Last Updated : 01 Oct 2018 05:24 PM

‘போபர்ஸ் ஊழலை மிஞ்சிவிட்டது ரபேல் ஊழல்’: பாஜகவை விளாசிய சிவசேனா

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், போபர்ஸ் ஊழலையும் மிஞ்சிவிட்டது. எந்த அரசியல் கட்சியும் ரபேல் குறித்து பேசாத நிலையில், ராகுல் காந்தி பேசுவது அவருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்திவிட்டது என்று சிவசேனா கட்சி பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உறவினர்கள் போபர்ஸ் ஊழலில் பயனடைந்தார்கள், ரூ.65 கோடி பெற்றார்கள் என்று கூறிய பாஜக இன்று அதிகாரத்தில் இருக்கிறது. இன்று ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி ஊழல் செய்துள்ளதாக பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போபர்ஸ் ஊழலைக் காட்டிலும் ரபேல் ஊழல் மிஞ்சிவிட்டது.

ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே பேசினார் என்பதால், அவரையும் தேசத் துரோகி என்று பாஜகவினர் கூறுவார்களா?

காங்கிரஸ் கட்சி ஒரு ரபேல் விமானத்தை ரூ.527 கோடிக்கு வாங்க பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், பாஜக அரசு ரூ.1,570 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அப்படியென்றால், இடைத்தரகரான அனில் அம்பானிக்கு கமிஷனாக ரூ.ஆயிரம் கோடியா.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தவுடன், அவருக்கு பாகிஸ்தான் பின்புலத்தில் இருந்து உதவுகிறது என்று பாஜக கூறிய குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.

இதேபோன்ற குற்றச்சாட்டு கடந்த 1980-களில் போபர்ஸ் ஊழல் நடந்தபோதும் காங்கிரஸ் கட்சி மீது வைக்கப்பட்டது. ஆனால், அது பாகிஸ்தானுக்கு உதவவில்லையே. போபர்ஸ் ஊழல் என்று சொல்லியவர்கள் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள், ஆனால், ரபேல் ஒப்பந்தத்தை ஊழல் என்று நம்பதயாராக இல்லை.

இன்று நாட்டில் ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக ராகுல் காந்திதான் குரல் கொடுத்து வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் மவுனமாக இருக்கின்றன. ராகுல் காந்தி தொடர்ந்து ரபேல் ஒப்பந்தம் குறித்து பேசுவதால், அவர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.

ஆனால், ரபேல் ஊழல் குறித்து மக்களைத் திசைதிருப்பும் வகையில், ராமர் கோயில் விவகாரத்தையும் இந்து முஸ்லிம் விவகாரத்தையும் பாஜக கையில் எடுத்துள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு பொய்யை மறைக்க 100 பொய்களை பாஜகவினர் கூறுகின்றனர்.

பாதுகாப்பு விவகாரங்களில் எந்தத் தகவலையும் யாரும் மறைக்க முடியாது. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் எந்தப் புள்ளியையும் மறைக்க முடியாது. ஏனென்றால், அனைத்து விவரங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துவிட்டன.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x