Published : 14 Oct 2018 12:07 AM
Last Updated : 14 Oct 2018 12:07 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று கற்பகவிருட்ச வாகனத்தில் பவனி வந்த மலையப்பர்.திருமலைதிருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனிவந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம் மோற்சவம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. வரும் 18-ம்தேதி வரை 9 நாட்களுக்கு இந்த உற்சவம் நடைபெறுகிறது. இதில் 4-ம் நாளான நேற்று காலை கற்பகவிருட்ச வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராய் ராஜ மன்னார் அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மூலவரை தரிசிக்க வந்த பக்தர்கள் பலரும் உற்சவ மூர்த்தியையும் தரிசிக்க திரண்டதால் மாட வீதிகளில் வழக்கத்தை விட அதிக பக்தர் கள் காணப்பட்டனர். வாகன சேவையில் துறையூர், குடியாத்தம், வாணியம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் புலியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், காளியாட்டம் போன்ற கிராமிய நடனங்களை ஆடினர். இதுபோன்று ஹரியாணா, குஜராத், சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும் பக்தர்களுக்கு விருந்து படைத்தனர். மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இன்று கருட சேவை
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றான கருட சேவை இன்று இரவு நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திரு மலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. திருப்பதி - திருமலை இடையே 24 மணி நேரமும் ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் இலவச பஸ் சேவையும் அளிக்கப்பட உள்ளது. பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளான விஷ்ணு நிவாசம், மாதவம் போன்ற இடங்களில் இருந்து அலிபிரி வரை இந்த பஸ்களில் இலவச பயணம் செய்யலாம். இதேபோன்று திருமலையிலும் இலவச பஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து திங்கள் கிழமை காலை 8 மணி வரை, திருமலைக்கு பைக்குகள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அலிபிரி அருகே வெளியூரிலிருந்து வரும் பஸ்கள், கார்கள், பைக்குகள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலையிலும் வாகனங்கள் நிறுத்த பல இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இன்று கருட சேவையை முன்னிட்டு அனைத்து சிறப்பு தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT