Published : 13 Oct 2018 06:15 PM
Last Updated : 13 Oct 2018 06:15 PM
ரபேல் ஒப்பந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெச்ஏஎல் நிறுவன ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பெங்களூருவின் கப்பன் பூங்காவில் நடைபெற்றது. அப்போது ஹெச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களும் அங்கே குழுமியிருந்தனர்.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஹெச்ஏஎல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய ராகுல், ''ஹெச்ஏஎல் ஒரு நிறுவனம் மட்டுமில்லை. விண்வெளித் துறையில், இந்தியா நுழைய உதவிய பெரும் சொத்து. இந்நிறுவனம் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது.
இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவுடன் போட்டியிட முடியும் என்று பாரக் ஒபாமா கூறினால், அதற்குக் காரணம் ஹெச்ஏஎல்தான் என்று புகழாரம் சூட்டினார் ராகுல் காந்தி.
தனது உரையின் இறுதியில், ''உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்'' என்றும் கேள்வி எழுப்பினார் ராகுல்.
ராகுல் காந்தியின் பெங்களூரு வருகைக்கு முன்னதாக அரசியல் தலைவர்கள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது எனவும் ஹெச்ஏஎல் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு அறிக்கை அனுப்பியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT