Published : 24 Aug 2014 09:21 AM
Last Updated : 24 Aug 2014 09:21 AM

பள்ளி இடை நின்றவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர அரசு முயற்சி: மனிதவளத்துறை அமைச்சர் தகவல்

வறுமை காரணமாக ஏதேனும் பணிக்குச் செல்ல நிர்பந்திக் கப்படும் பள்ளி இடை நின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்வியைத் தொடர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை விவேகானந்தா கல்விச் சங்கம் சார்பாக நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியதாவது:

"எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள‌ ஒரு மாணவர் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் பணிக்குச் செல்ல நிர்பந்திக்கப்படலாம். அப்படியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்கள் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் ஒரு மாணவர் முனைவர் பட்டம் வரைக்கும் படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதுதொடர்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

மேலும், பள்ளி மாணவர் களுக்காக 'இஷான் விகாஸ்' என்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் 9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் பின்னாளில் ஆய்வாளர்களாகவோ, விஞ்ஞானி களாகவோ ஆவதற்கு ஆர்வம் காட்டும் சிலரைத் தேர்வு செய்து அவர்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நாட்டில் உள்ள உயர்ந்த கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் சுமார் 2200 மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.

கல்வி என்று வரும்போது பெண்கள், பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்டவர்களால் உயர் கல்வியை அடைய முடிவதில்லை. இதற்குப் பொருளாதார வசதியின்மையே காரணம்.

என்னிடம் பணமில்லை என்பதால் தான் நான் என்னுடைய கல்வியை இடையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது".இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x