Last Updated : 08 Oct, 2018 07:19 PM

 

Published : 08 Oct 2018 07:19 PM
Last Updated : 08 Oct 2018 07:19 PM

பொது இடத்தில் ராஜஸ்தான் முதல்வர் போஸ்டர் மீது ‘சிறுநீர்’ கழித்த பாஜக அமைச்சர்: ‘பழங்காலப் பழக்கம்’ என்று மழுப்பல்

பொது இடத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே பதாகை மீது சிறுநீர் கழித்த ராஜஸ்தான் அமைச்சர் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக வசுந்தரா ராஜே உள்ளார். அங்கு அமைச்சராக இருப்பவர் ஷம்பு சிங் கேதாசர். இவர் ராஜஸ்தான் மாநில விதைகள் கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அஜ்மீரில் பாஜக பேரணி நடந்தது. பேரணி நடந்த பகுதிக்கு பின்புறம் சென்ற அமைச்சர் ஷம்பு சிங் கேதாசர், முதல்வர் வசுந்தரா ராஜேவின் பதாகை மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைச் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லை என்று ஸ்வச் பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் ஷம்பு சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் அதற்குப் பதில் அளிக்கையில், ''திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது பழங்காலப் பழக்கம். சிறுநீர் கழிப்பதால் எந்தவிதமான சுகாதாரக் குறைபாடும் ஏற்பட்டுவிடாது. நான் முதல்வர் பதாகை மீது சிறுநீர் கழிக்கவில்லை, சிறிது தொலைவு தள்ளித்தான் சிறுநீர் கழித்தேன்.

காலை நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தேன். அந்தப் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்கான இடம் ஏதும் இல்லை. அதன் காரணமாகவே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஸ்வச் பாரத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்திவரும் நிலையில், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது தவறாகும். ஆனால்,இயற்கை உபாதையை என்ன செய்ய முடியும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இதுபோல் செய்ய முடியாது, அவ்வாறு செய்தால் சுகாதாரக்கேடு உருவாகும்'' என்று அமைச்சர் ஷம்பு சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x