Published : 20 Oct 2018 12:23 PM
Last Updated : 20 Oct 2018 12:23 PM
தவறான செல்போன் எண்ணில் பேசிய குரலால் ஈர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு, செல்போனில் பேசிய 60 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்துள்ளது. அசாமில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறார். படிக்காத காரணத்தால் அவர் கட்டிடவேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்னர், வேலையில்லாத நேரத்தில் நண்பருடன் பேச நினைத்துள்ளார்.
ஆனால் தவறான எண்ணை அழுத்தியதால், இணைப்பு வேறொரு பெண்ணுக்குச் சென்றுள்ளது. மறுபுறம் பேசிய குரல் இனிமையாக இருந்ததால், அடிக்கடி பேச ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் குரலைக் கேட்காமல் இருக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டது. தினமும் பல்வேறு முறை இருவரும் பேச ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் பிரம்மபுத்திரா நதிக்கரை ஓடும் சுக்குவாஜார் கிராமத்தில் சந்திக்க முடிவெடுத்தனர். ஆனால் நேரில் சந்தித்தபோது சிறுவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் 60 வயதுள்ள மூதாட்டியாக இருந்தார். அப்போது இருவரின் எதிர்ப்பையும் மீறி, மூதாட்டியின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர்.
சிறுவன் பேசிய விதம் தனக்குப் பிடித்திருந்ததாகவும், அவரை நண்பனாக நினைத்ததாகவும் சம்பந்தப்பட்ட மூதாட்டி தெரிவித்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள நினைத்ததில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே குழந்தைகள் உரிமைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு ஆணையம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. ''இதுகுறித்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனின் வயதைப் பொறுத்து குழந்தைகள் திருமணச் சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
கோல்பாரா மாவட்ட துணை ஆணையர் வர்நாலி தேகா கூறும்போது, ''சிறுவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ய முயற்சித்ததாக அதிகாரபூர்வப் புகார் எதுவும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT