Published : 14 Oct 2018 12:40 AM
Last Updated : 14 Oct 2018 12:40 AM

’தித்லி’ புயலால் ஆந்திராவுக்கு ரூ.2,800 கோடி இழப்பு: உடனடி நிவாரணமாக ரூ.1,200 கோடி தேவை; பிரதமர் மோடிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்

தித்லி புயலால் ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடி நிவாரண நிதியாக ரூ. 1,200 கோடி வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தித்லி புயல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான காகுளம் மற்றும் விஜய நகர மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இப்புயலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள், தென்னை, வாழை, முந்திரி போன்றவை அழிந்துள்ளன. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மொத்தம் ரூ. 2,800 வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாமென முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, உடனடி நிவாரண நிதியாக ரூ. 1,200 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சந்திரபாபு நாயுடு நேற்று கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தித்லி புயலால் ஆந்திராவில் மின்வாரிய துறைக்கு ரூ. 500 கோடி, சாலைகள் மற்றும் கட்டிடங்களின் சேதத்துக்கு ரூ. 100 கோடி, பஞ்சாயத்து ராஜ் துறைக்கு ரூ. 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயம் தொடர்பாக ரூ. 1,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவை தவிர, கால்நடை, மீன்வளத் துறைக்கு ரூ. 100 கோடி, கிராமிய குடிநீர் வாரியத்துக்கு ரூ. 100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அரசு தற்போது போர்க்கால அடிப்படையில் காகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் பணிகளை செய்து வருகிறது. இதற்கு உடனடியாக மத்திய அரசும் நிவாரண நிதி வழங்கி ஆந்திராவுக்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x