Published : 25 Oct 2018 08:31 AM
Last Updated : 25 Oct 2018 08:31 AM
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய தற்காலிக இயக்குநராக பதவியேற்றிருப்பவர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மன்யம் நாகேஸ்வர் ராவ். ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த இவர், படிப்படியாக உயர்ந்து நாட்டின் ஒரு பெரிய பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் ஒருங்கிணைந்த மாவட்டமான வாரங்கல், மங்கபேட்டா மண்டலம், போரு நர்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மன்யம் நாகேஸ்வர் ராவ். பிச்சைய்யா, சேஷம்மா தம்பதியினர் மகனான இவருக்கு, ஒரு அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், மங்கப்பேட்டா பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர், இவர் வாரங்கலில் இண்டர்மீடியட்டும், சிகேஎம் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தார். இதனை தொடர்ந்து நாகேஸ்வர் ராவ், 1986-ம் ஆண்டு, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், இவர், ஒடிஷாவில் ஐபிஎஸ் முடித்தாலும், பெரும்பாலும் சத்தீஸ்கரில் பணியாற்றினார். ஒடிஷா மாநில டிஜிபியாகவும் பதவி வகித்தார். அதன் பின்னர் தென்மாநிலங்களின் சிபிஐ இயக்குநராக பதவி வகித்து வந்தார். தற்போது சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த இவர், சிபிஐ இயக்குநரகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகளால், ஒரு இக்கட்டான சூழலில் சிபிஐயின் புதிய தற்காலிக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். தென்னிந்தி யாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில், விவசாயியின் மகனாகப் பிறந்து அரசு பள்ளிகளில் படித்து, படிப்படியாக உயர்ந்து, தற்போது நாட்டின் ஒரு முக்கிய பதவி வகிப்பதை, இவரது கிராமத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது இவர் படித்த பள்ளி, கல்லூரிகளிலும் நேற்று உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT