Last Updated : 03 Oct, 2018 01:01 PM

 

Published : 03 Oct 2018 01:01 PM
Last Updated : 03 Oct 2018 01:01 PM

11 ஆயிரம் பாட்டில் பீர் மாயம்: எலி மீது பழிபோடும் பிஹார் போலீஸார்

பிஹார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெய்டு நடத்தி பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த 11 ஆயிரம் பாட்டில் பீரையும் எலி குடித்துவிட்டதாக  போலீஸார் கூறியுள்ளனர்.

பிஹார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் ஆட்சிப் பொறுப்பேற்றபின், அங்கு மதுவிலக்கைக் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவந்தார். அப்போது மாநிலத்தில் மதுகுடிப்போர், மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ய முயன்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது, பீர் பாட்டில்கள், கேன்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்து போலீஸார் கிட்டங்கியில் வைத்திருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்குப் பின் அந்த மதுபாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தபோது அந்த மதுபாட்டில், பீர் பாட்டில்கள் காலியாகக் கிடந்தன.

இதுகுறித்து பிஹார் மாநிலத்தின், கைமூர் மாவட்டத்தின் நகர நிர்வாக அதிகாரி கல்பனா குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

''கடந்த 2 ஆண்டுகளாக பிஹார் மாநில போலீஸார் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி 11 ஆயிரம் பீர் கேன்களைப் பறிமுதல் செய்து போலீஸ் கிட்டங்கியில் வைத்திருந்தார்கள். இந்தக் கிட்டங்களில் மொத்தம் 16 லட்சம் ஐஎம்எல் மதுவும், 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மதுவும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த பீர் கேன்களை இப்போது நீதிமன்றத்தில் ஒப்படைத்து, அழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதற்காகக் கிட்டங்கியில் சென்று பீர் பாட்டில்களையும், கேன்களையும் பார்த்தால், பீர் அனைத்தும் மாயமாக இருக்கிறது.

அனைத்து பீர் கேன்களிலும், சிறிய துளைபோடப்பட்டுள்ளது. இந்த பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்'' எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே இதேபோன்று கடந்த ஆண்டும் சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு ஆயிரக்கான லிட்டர் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து போலீஸார் கிட்டங்கியில் வைத்திருந்தனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நேரத்தில் மதுபாட்டில்களை ஆய்வு செய்த போது அதில் மது இல்லாமல் இருந்தது, அப்போதும் எலி மீது போலீஸார் பழி சுமத்தினர். இப்போது பாட்டிலில் உள்ள பீர் காணாமல் போனதற்கும் எலிதான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x