Published : 14 Aug 2018 04:44 PM
Last Updated : 14 Aug 2018 04:44 PM
60 வயதுக்கு மேல் ஆகியும், மீண்டும் குழந்தையைப் போல் உணர்கிறேன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற நீதிபதி கே.எம். ஜோஸப் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகச் சமீபத்தில் 3 பேர் நியமிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோஸப், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சரண் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நீதிபதிகளாகப் பதவி ஏற்றுக்கொண்டபின், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் புதிய நீதிபதிகள் மூன்றுபேரும், சமீபத்தில் பதவி ஏற்ற இந்து மல்ஹோத்ராவும் பங்கேற்றார்.
இந்து மல்ஹோத்ராவுடன், இணைந்து நீதிபதி கே.எம்.ஜோஸப் உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியத்தால், கடந்த ஜனவரி மாதம் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், மத்தியஅரசு கே.எம்.ஜோஸப் நியமனத்துக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவரின் பெயர் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், இந்து மல்ஹோத்ராவுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் அவர் நீதிபதியாகப் பதவி ஏற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, சரண் ஆகியோர் நியமனத்தின்போது, அவர்களுடன் சேர்த்து கே.எம்.ஜோஸப் பெயருக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து. மூத்த நீதிபதியாக ஜோஸப், சீனியாரிட்டியில் குறைக்கப்பட்டு, 25-வது வரிசையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியிலும், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி, சரண் ஆகியோர் பேசி முடித்தபின் கடைசியாக கே.எம். ஜோஸப் பேச அழைக்கப்பட்டார். மிகக்குறைவான நேரமே கே.எம். ஜோஸப் பேசினார். அவர் கூறியதாவது:
என்னுடைய பதவிக்கும், பொறுப்பும் ஏற்றார்போல் செயல்படுவேன், பதவி ஏற்கும்போது என்னவிதமான வாக்குறுதிகள் எடுத்தேனோ அதை உறுதியாகப் பின்பற்றுவேன். எனக்கு என்னுடைய வரையறைகள் என்ன என்பது தெரியும் என்பதால், எந்தவிதமான வாக்குறுதி அளிப்பதிலிருந்து விலகியே இருப்பேன்.
60 வயதுக்கு மேலாகியும் நான், மீண்டும் குழந்தையைப் போல் உணர்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் என்னை முதலில் பேச அழைப்பதாகவும், நான்தான் முதலில் பேச வேண்டும் எனவும் தெரிவித்தனர். ஆனால், இங்கு நான் எதிர்பார்த்தது போல ஜூனியர் என்ற முறையில் கடைசியாகவே பேச அழைக்கப்பட்டேன்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நான் நியமிக்கப்பட்டது உண்மையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நான் பதவி ஏற்கும்போது, உறுதிஏற்பில் கூறிய வார்த்தைகளுக்கு உண்மையாக நடந்து, நீண்டகாலத்துக்கு நீதிபரிபாலனத்தை சிறப்பாகக் கொண்டு செல்வேன் எனத் தெரிவித்தார்
நீதிபதி ஜோஸப் தான்பேசும் போது, தனது தந்தையும், நீதிபதியான கே.கே. மாத்யூ குறித்தும், தன்னுடைய பால்யபருவத்தின் நினைவுகளைகும் குறிப்பிட்டுப் பேசியதை அனைவரும் ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT