Published : 25 Aug 2018 08:14 AM
Last Updated : 25 Aug 2018 08:14 AM
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத விழா வெகு சிறப்பாக நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும், நேற்று இவ்விழாவினை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் வெகு சிறப்பாக நடத்தினர். முன்னதாக காலை, மூலவர் மற்றும் உற்சவ
தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஆஸ்தான மண்டபத்தில் உற்சவ தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கலச பூஜை செய்யப்பட்டது. மேலும், பல வித பூக்கள், துளசி, தவனம் போன்றவற்றால் அர்ச்சனை செய்தனர். மாலை, தங்க ரதத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரை, திரளான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வரலட்சுமி விரதத்தையொட்டி, கோயிலில் பலவித வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இந்த வரலட்சுமி விரத விழாவில் காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல் போன்றவற்றை தேவஸ்தானம் இலவசமாக வழங்கியது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரத விழாவினையொட்டி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT