Published : 17 Aug 2018 08:01 AM
Last Updated : 17 Aug 2018 08:01 AM
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் ‘கிரீமிலேயர்’ (பொருளாதார உச்சவரம்பு) அணுகுமுறையை பின்பற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.
அரசு ஊழியர்களாக பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்ககானது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், எஸ்.கே.கவுல், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதம்:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வு வழங்கும்போது ‘கிரீமிலேயர்’ கொள்கையை பின்பற்றி, பொருளாதார ரீதியாக வளர்ந்த பிரிவினரை ஒதுக்க வேண்டும் என்று எந்தசட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அப்படியே ஒரு சிலர் பொருளாதார ரீதியாக வளர்ந்திருந்தாலும், சமூகத்தில் அவர்கள் மீதான பாரபட்சம் மற்றும் பின்தங்கிய நிலை மாறாததால் அவர்களுக்கான பதவி உயர்வில் ‘கிரீமிலேயர்’ கொள்கையை பின்பற்றுவது பொருத்தமாக இருக்காது.
மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவில் சிலர் முன்னேறி இருந்தாலும், அவர்கள் அதே சமுதாயத்தில்தான் திருமணம் செய்யவேண்டிய நிலை நீடிக்கிறது.
அவர்கள் வேறு வளர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்ய முடிவதில்லை. ஜாதி ரீதியான சமூகபாரபட்சம் இன்னும் நீடிப்பதால், அவர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் ‘கிரீமிலேயர்’ கொள்கையை கொண்டு வரக்கூடாது.
அவ்வாறே, ‘கிரீமிலேயர்’ முறையை கொண்டு வருவதுஎன்றாலும், அதை குடியரசுத்தலைவர் அல்லது நாடாளுமன்றம் மட்டுமே செய்ய முடியும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. என்.எம்.தாமஸ் வழக்கில் (1976), 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், இந்திரா சாஹ்னி வழக்கில் (1992), 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன.
எனவே, இதுகுறித்து மேலும் பரிசீலிக்க வேண்டுமெனில், அதைவிட கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றிய பின்னரே விவாதிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது.
ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தவர்களாக கருதி, அவர்களை ‘கிரீமிலேயர்’ பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை மத்திய அரசு பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT